திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் மனைவியைத் தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை, ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபர். குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த வழக்கினை விசாரணை செய்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.என்.விஸ்வானந்த பெர்னாண்டோ சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.