காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏழு வருடத்துக்கு முதல் சொன்ன பதிலையே இப்பொழுதும் சொல்கிறது என பெண் ஒருவர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போதே அப்பெண் இவ்வாறு கூறியுள்ளார்.
காணாமல் போயுள்ள தனது கணவர் தொடர்பில் தகவல்களை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக தாம் வருகை தந்த போதும் தனது கணவர் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை இருக்கிறதா என தம்மிடமே ஆணைக்குழு கேள்வியெழுப்புவதாக குறித்த பெண் சாடியுள்ளார்.
அத்துடன், தனது கணவர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எந்தவொரு முடிவையும் வழங்க முடியாது என தெரிவித்த குறித்த பெண், ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் காணாமல் போன தனது கணவர் மீண்டும் கிடைக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், ‘விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தவர்களை விசாரணைக்கு வருமாறு இராணுவத்தினர் விடுத்த அழைப்பின் பேரில் தனது கணவர் வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவர் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற்றப்பட்டு, ஓமந்தை பகுதியை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். அவரது பெயர் பூசா மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றில் ஒட்டப்பட்டிருந்தது’ என்றார்.
மேலும், ‘தனது கணவர் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்த அப்பெண், காணாமல் போனவர்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.