கணிதத்தில் பின்னியெடுத்த ‘கணக்குப் புலி’ நிகிதா!

244

கணக்கு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பயந்து ஓடும் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிகிதா கணிதத்தில் எந்த மாதிரியான பிராப்ளம் கொடுத்தாலும் அதற்கு சரியான பதிலை சொல்லிவிடுகிறார்.

சென்னை, பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில்தான் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் நிகிதா. ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் நடைபெறும், அகில இந்திய கணித அறிவியல் திறனறித் தேர்வில் (ALL INDIA MATHS SCIENCE TALENT EXAMINATION (AIMS TALENT EXAM) இந்த வருடம் முதல் இடம் பிடித்து அந்த பள்ளிக்கும், அவரது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து நிகிதாவின் தாயார் நாடியம்மாளிடம் பேசினோம், “இந்த வருடம் ஜனவரி 19ம் தேதி நடைபெற்ற எய்ம்ஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் சிபிஎஸ்ஸி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு AIMS Talent தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் மாணவர்களுடைய கணித அறிவை பரிசோதிக்கும் வகையில் திறனறி கேள்விகள் கேட்கப்படும். Problem solving வரிசையிலேயே கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படும். இதை குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக செய்து முடிப்பவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற தேர்வில் நிகிதா நூறு மதிப்பெண்ணுக்கு 99.95 மதிப்பெண்களும், இந்திய அளவில் ஐந்தாவது இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இந்த தேர்வுக்கு 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் அகில இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்திருப்பதால், அடுத்த வருடத்திலிருந்து இந்த கட்டணத்தை கட்டத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றவர்,

”நிகிதாவுக்கு இதுவரை இதற்காக எந்தவிதமான பயிற்சியும் கொடுத்ததில்லை. அவளுக்கு இயற்கையாகவே எழுத்துக் கூட்டி எளிமையாக படிக்கக்கூடிய திறன் உள்ளதாலும், கணிதத்தின் மீது ஆர்வம் இருந்ததாலும் அதற்கான ஊக்கம் மட்டுமே கொடுத்து வருகிறோம். எதாவது ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் சொன்னால் அதை எளிதாகப் புரிந்து கொண்டு எழுதிவிடுவாள். மற்றபடி, இதர பாடங்களில் சராசரியான மதிப்பெண்கள் தான் எடுத்து வருகிறாள். கணிதத்திலும் அப்படித்தான். IAS,IPS தேர்வுகளுக்கும் இது போன்ற ஆப்டிடியூட் டெஸ்ட்தான் அதிகமாக வரும் என்பதால் அவளை அந்த மாதிரி தேர்வுகளுக்கு அவளுடைய விருப்பம் இருந்தால் படிக்க வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

நிகிதாவிடம் பேசினோம், ‘எனக்கு கணக்குனா ரொம்ப பிடிக்கும். இதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினதும் என்னோட கிளாஸ் டீச்சரும், பிரின்சிபலும் கூப்பிட்டு பாராட்டினாங்க. இப்போ மியூசிக் கிளாஸூம், டான்ஸ் கிளாஸூம் போயிட்டு இருக்கேன்” என மழலைக் குரலில் பேசுகிறார்.negeta

SHARE