பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை உள்பட உலகில் உள்ள பிற நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் நடந்துள்ளதாக யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க கடுமையான சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் என்று யூரோபோல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, 99 நாடுகளை சேர்ந்த சுமார் 75,000 கணினிகளில் ரான்சம்வேர் ஊடுருவி தரவுகளை அணுகமுடியாதபடி செய்துவிட்டது.
ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எனினும், WannaCry மற்றும் பிற பெயர்களை கொண்டுள்ள இந்த தீய மென்பொருளின் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்று தோன்றினாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை.
இணைய வழி தாக்குதல்களை விசாரிக்கும் இ சி 3 எனப்படும் தனது குழு பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருவதாகவும், அச்சுறுத்தலை குறைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முயன்று வருவதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் மட்டும் மொத்தமாக 48 தேசிய சுகாதார சேவைகள் நேற்று நடைபெற்ற இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் 6 -ஐ தவிர மற்றவை இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் ஆம்பெர் ரட் தெரிவித்துள்ளார்.
– BBC – Tamil