கத்தாரின் பலே திட்டம்

209

கத்தாரில் நிலவும் பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 4,000 மாடுகளை விமானம்மூலம் இறக்குமதிசெய்யத் திட்டமிட்டுள்ளது அந்த நாட்டு அரசு.

கத்தார் நாடு, தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக ஜூன் 5 ஆம் திகதி, அறிவித்தன.

தடை உத்தரவைத் தொடர்ந்து, உணவுப் பொருள்களுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பால் மற்றும் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதால், மாடுகள் இறக்குமதியில் அந்த நாட்டு அரசு தீவிரம்காட்டிவருகிறது. கத்தாருக்கு சவுதியில் இருந்துதான் பால் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம்.

பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 4,000 மாடுகளை வாங்கியுள்ளது கத்தார் அரசு. ’பவர் இன்டர்நேஷனல் ஹோல்டிங்’ என்னும் நிறுவனம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது. அவற்றை கப்பல்மூலம் கத்தாருக்குக் கொண்டுவர முதலில் இந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

பின்னர், விமானம்மூலம் மாடுகளைக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாடுகளைக் கத்தாருக்குக் கொண்டுவர, 60 விமானங்களைப் பயன்படுத்த உள்ளனர்.

இவ்வளவு மாடுகளை விமானம்மூலம் இறக்குமதி செய்வது இதுவே முதன்முறை. இது ஒரு மிகப்பெரிய முயற்சி என்று தெரிவித்துள்ளார், பவர் இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத் தலைவர் மௌதஸ் அல் கய்யாத்.

சில தினங்களுக்கு முன்னர் கத்தாரில் நிலவும் உணவு நெருக்கடியை அந்த நாடு சமாளிக்கும் பொருட்டு ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தனித்தனியாக விமானம் மற்றும் கப்பல்களில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது.

SHARE