கனடிய தமிழர் பேரவை நடத்திய தமிழர் விழா (Tamils Fest என்று ஆங்கிலத்தில் போட்டுவிட்டு தமிழில் தெருவிழா என்று போட்டிருக்கிறார்கள். ஏன் என்பது விளங்கவில்லை) சிறப்பாக நடந்து முடிந்தது. வழக்கம் போல் மக்கள் இரண்டு நாளும் ஆயிரக் கணக்கில் வந்திருந்தார்கள். தாயகத்தில் இருந்து வந்த தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் அரசுக் கட்சி செயலாளர் நாயகம் திரு கி. துரைராசசிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனால்ட் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முதல் நாள் மாவை சேனாதிராசாவும் அடுத்த நாள் ஆனால்ட் மற்றும் துரைராசசிங்கம் இருவரும் பேசினார்கள். தென்னமரவடிக் கிராமத்தின் மீள்குடியேற்றத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது.
1984 முன்னர் இந்தக் கிராமத்தில் 361 குடும்பங்கள் வாழ்ந்தன. மீன்பிடி, கமம், கால்நடை வளர்த்தல் முக்கிய தொழில்களாக இருந்தன. 1984 இல் சிங்களவர்கள் இந்தக் கிராமத்தைத் தாக்கி எரியூட்டியதை தொடர்ந்து மக்கள் குடிபெயர்ந்தார்கள். பலர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்று தஞ்சம் அடைந்தார்கள். 242 குடும்பங்கள் முல்லைத் தீவு முள்ளியவளை கிராமத்தில் குடி புகுந்தார்கள். இந்தக் குடும்பங்களை தென்னமரவடியில் மீள் குடியேற்ற வேண்டும். இப்போது 82 குடும்பங்களே தென்னமரவடியில் மீள்குடியேறி வாழ்கிறார்கள். இங்கு 10 ஏக்கர் காணியில் மாட்டுப் பண்ணை, தென்னை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊடுபயிராக கச்சான் விதைக்க உதவி வழங்கப்பட இருக்கிறது. மீள்குடியேறுபவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சி நடை பெறுகி்றது. இந்த திட்டத்திற்கு டொலர் 100,000 தேவைப்படுகிறது. இதனை கனடா ததேகூ, கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கம் மற்றும் கனடிய மக்கள் பேரவை திரட்டிக் கொடுக்க முன்வந்துள்ளன. கனடிய தமிழர் பேரவை நடைபவனி மூலம் இதற்கான நிதி திரட்ட இருக்கிறது. எதிர் வருகிற செப்தெம்பர் 9 இல் தொம்சன் பூந்தோட்டத்தில் இந்த நடை பவனி இடம்பெறும். இதில் மாவை சேனாதிராசா, இ.ஆனால்ட் கலந்து கொள்கிறார்கள். கனடிய மக்கள், ஊர்ச்சங்கங்கள் தங்களால் இயலுமான உதவி செய்தால் டொலர் 100,000 யை திரட்டிவிட முடியும். 2011 ஆம் ஆண்டு இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களுக்கு பசு மாடுகள் வாங்க தலைக்கு ஒரு இலட்சம் கனடா ததேகூ கொடுத்திருந்தது. இதில் ஒரு குடும்பத்தைத் தவிர எஞ்சிய 9 குடும்பங்களிடம் இன்று 6-7 பசுமாடுகள் இருக்கின்றன. பாலை விற்று வரும் வருமானத்தில் வாழ்கிறார்கள்.
தென்னமரவடி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு கிள்ளித்தராமல் அள்ளித் தாருங்கள்.