கனவு கண்டு பயந்தவர்களைப் போன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கனவில் மிரண்டவர்களைப் போன்றே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சிக்குள் அழைத்து சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை அழைத்து ஆளும் கட்சியில் இணைத்துக் கொண்டு அமைச்சு மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பங்களில் வீரர்களைப் போன்று தற்போது பேசுவோர், முதலைக்கண்ணீர் வடிப்போர் அப்போது ஏன் அமைதி காத்தார்கள் என துமிந்த திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை என அண்மையில் விதுர விக்ரமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.