
எந்த மதத்தையும் சார்ந்து இருக்கலாம். ஆனால் தேச துரோகியாக இருப்பதுதான் தவறு என்று கமல்ஹாசன் பேசியவசனம் டிரெய்லரில் இருந்தது. இந்த டிரெய்லருக்கு விமர்சனங்களும் கிளம்பின. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் விஸ்வரூபம்-2 வெளியாகிறது.
காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து கூறியதற்காக அங்கு கமல்ஹாசன் படங்களை திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சமீபத்தில் ரஜினிகாந்தின் காலா படத்தையும் தடுத்தார்கள். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மறுநாள் சில தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
விஸ்வரூபம்-2 படத்தையும் வாங்க வேண்டாம் என்று அங்குள்ள வினியோகஸ்தர்களை கன்னட அமைப்புகள் இப்போதே மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் நெருக்கமாக இருக்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். சமீபத்தில் நேரில் சந்தித்தும் காவிரி பிரச்சினை குறித்து பேசிவிட்டு திரும்பினார்.
எனவே விஸ்வரூபம்-2 படத்துக்கு குமாரசாமி ஆதரவு இருக்கும் என்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பை அவர் முறியடித்து படம் வெளிவர உதவுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனும் விஸ்வரூபம்-2 படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் அரசியல் ரீதியாக சந்திக்க தயார் என்று அறிவித்து உள்ளார்.