காட்டில் நேரத்தை செலவிடச் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாயும் கைக்குழந்தையும் கரடி ஒன்றினால் கொல்லப்பட்டனர்.
கனடாவின் Yukon பகுதியைச் சேர்ந்த ஆசிரியையான Valérie Théorêt, (37), தனது கணவர் Gjermund Roesholt மற்றும் தனது 10 மாதக் குழந்தையான Adele Roesholtஉடன் காட்டுப்பகுதியில் ஒரு மரத்தாலான வீட்டில் தங்கி இயற்கையை அனுபவித்து வந்தார்.
இயற்கையுடன் ஒன்றி வாழ்வதில் விருப்பம் உள்ள அந்த தம்பதியினருக்கு, Valérie
ஒரு ஆசிரியையாக இருந்ததால் விடுமுறையே கிடைப்பதில்லை. இந்நிலையில் Adele பிறந்ததால் அவருக்கு பிரசவ விடுப்பு கிடைத்தது.
அதை பயன்படுத்தி குடும்பமாக மூவரும் காட்டுப்பகுதிக்கு சென்று சிறு மிருகங்களை பொறி வைத்து பிடிப்பதில் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை Gjermund வெளியில் சென்றிருந்தார். மூன்று மணியளவில் அவர் தாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு திரும்பி வந்தபோது அவரை ஒரு கரடி துரத்தியது.
அதை சுட்டுக் கொன்று விட்டு வீட்டுக்குள் சென்று பார்த்த Gjermundக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே அவரது மனைவியும் பத்து மாதக் குழந்தையும் ஏற்கனவே கரடியால் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.
பதறிப்போன Gjermund தன்னிடமிருந்த ஆபத்து நேரத்தில் உதவி கோரும் கருவியின் உதவியால் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
செய்தி கிடைத்ததும் கனடா பொலிசார், அருகிலுள்ள கிராமத்து மக்கள் மற்றும் அவரது நண்பர்கள் விரைந்து Gjermund தங்கியிருந்த இடத்தை அடைந்தனர்.
ஒரே நேரத்தில் அன்பு மனைவியையும் ஒரே குழந்தையையும் இழந்து தவிக்கும் Gjermundக்கு ஆறுதல் கூற கூட இயலாமல் அவரது நண்பர்களும் உறவினர்களும் தவித்து நிற்கின்றனர்.
இந்த சம்பவம் Yukon பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.