கராத்தே பயில அனுமதி மறுத்ததால் தூக்கில் தொங்கிய மாணவன் உயிரிழப்பு..!!

181
பாடசாலையில் கறாத்தே கற்பதற்கு பெற்றோர் அனுமதிக்காமையால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தரம் 6 கல்வி கற்கும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ் தேனினியன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்தவராவர்.

குறித்த மாணவனை பாடசாலையில் கறாத்தே பயிலுவதற்காக பெற்றோரிடம் கடிதம் வாங்கி வருமாறு பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தந்தை தற்போது கறாட்டி பயில்வதில் ஈடுபட்டால் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என தெரிவித்து கடிதம் வழங்க மறுத்துள்ளார்.

இதனால் கவலையுடன் பாடசாலை சென்ற குறித்த மாணவனுக்கு தாய் 20 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

எனினும் அப் பணத்தை அம் மாணவன் வீதியில் வீசி விட்டு செல்லவே அதனை அவதானித்த அவனது சகோதரன் இச் சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் தாய் அம் மாணவனிடம் காசை வீசியமை தொடர்பாக தந்தைக்கு கூறப் போவதாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான கடந்த 17 ஆம் திகதி மாலை வீட்டின் பின்புறமாக உள்ள தற்காலிக கொட்டகைக்குள் சென்று அங்கு வாழைக்குலை தொங்க விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதன் போது அங்கு தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்த வந்த அவரது சகோதரன் தூக்கில் தொங்கிய தம்பியை காப்பாற்றி அவனை தாயுடன் இனைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அன்று இரவு எட்டு மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் நேற்று காலை 4மணியளவில் குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

SHARE