கர்நாடகாவில் தமிழர்கள் மீது வன்முறை

174

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.பெங்களூரில் தமிழக வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.காவிரியிலிருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 20ஆம் திகதி வரை தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தன.

இந்த நிலையில் நேற்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளான தாண்டவபுரா, மாண்டியாவில் தமிழர்களால் நடத்தப்பட்டு வந்த கடைகள் மற்றும் அவர்களது வாகனங்களை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த கர்நாடக காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தது.

பெங்களூரில் பூர்விகா மொபைல் கடை, அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆகியவையும் தாக்குதலுக்கு உள்ளாகின.

தமிழக வாகனப் பதிவெண் கொண்ட லொறிகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பெங்களூர் நகரம் முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு போல காட்சியளிக்கிறது.

கர்நாடகாவில் தமிழர்கள் மீதும் தமிழக வாகனங்கள் மீதும், தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் தாக்கப்படுவதன் எதிரொலியாக, அத்திபள்ளியில் கர்நாடக வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

நடிகர்களுக்கு பாதுகாப்பு

இதேவேளை சென்னையில் உள்ள கன்னட நடிகர்களான ரஜினிகாந்த், பிரபுதேவா, ரமேஷ் அரவிந்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரின் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும் கடந்த ஒரு வார காலமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்த போராட்டம் வன்முறையாக மாறியது. தமிழர்கள் மீதும், வாகனங்கள் கடைகள் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன.

இதனையடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த் (தேனம்பேட்டை, போயஸ் கார்டன்), பிரவுதேவா (ஆழ்வார்பேட்டை, டிடிகே ரோடு), ரமேஷ் அரவிந்த், பாபி சிம்ஹா (வளசரவாக்கம்) ஆகியோரது வீடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழக அரசுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஏற்கனவே கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி செப்டம்பர் 17ஆம் திகதி வரை 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட வேண்டும் என்று கூறியிருந்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால், நேற்று பிறப்பித்த உத்தரவில், தமிழகத்துக்கு நாள்தோறும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை 15 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாகக் குறைத்து, 20ஆம் திகதி வரை 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்று பெங்களூர் மாநகர ஆணையர் என் எஸ் மெகாரிக் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காவிரி நதிநீர் விவகாரத்தால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்த பெங்களூரில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனை பெங்களூரின் மாநகர ஆணையர் மறுத்துள்ளார்.

பெங்களூர் மட்டும் அல்லாமல், கர்நாடகாவின் எந்த பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று பெங்களூர் மாநகர ஆணையர் என்.எஸ். மெகாரிக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

காவிரி பிரச்சினை தலை தூக்கியுள்ள நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 5 மணி முதல் கர்நாடகத்தின் பெங்களூர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5ஆம் திகதி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

முந்தைய உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும்.

நேற்று பிறப்பித்த உத்தரவுப்படி 20ஆம் திகதி வரை அதாவது கூடுதலாக 3 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உத்தரவால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகளிடம் கர்நாடக அரசு கோரிக்கையை முன் வைத்தது.karnadaka

SHARE