கனடா நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாடகைக்கு வீடு வழங்க உரிமையாளர் மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வின்னிபெக் நகரை சேர்ந்த எமி பெய்லி என்ற 6 மாத கர்ப்பிணி பெண் வாடகை வீடு ஒன்றை தேடி வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு இருப்பதாக அறிந்த அவர் அங்கு சென்று உரிமையாளரை நேரடியாக சந்தித்துள்ளார்.
அப்போது, எமி கர்ப்பிணியாக இருந்ததை கண்டு முகம் சுழித்த உரிமையாளர் ’வீடு வாடகைக்கு இல்லை’ எனக்கூறி அவரை அங்கிருந்து புறப்படுமாறு கூறியுள்ளார்.
உரிமையாளரின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த எமி, வீடு மறுக்கப்படுவதற்கு என்ன காரணம் எனக் கேட்டுள்ளார்.
’கர்ப்பிணியான உங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அது எந்த நேரமும் அழுதுக்கொண்டே இருக்கும். வீட்டிற்குள் இருக்கும் சுவர்கள் மிகவும் மெலிதானவை. இதனால் அருகில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவாக இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.
உரிமையாளரின் பதிலால் மேலும் அதிர்ச்சி அடைந்த எமி காரை எடுத்துக்கொண்டு வெளியேறி சுமார் 20 நிமிடங்கள் அழுதுக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த விவகாரம் வெளியே வந்ததற்கு பிறகு, ‘கர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், புதிதாக பிறக்கும் குழந்தையின் வசதிக்கு ஏற்றவாறு இந்த வீடு இருக்காது என்பதற்காக தான் வீடு வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மனிடோபா மனித உரிமையகள் ஆணைய அதிகாரியான Heather Unger என்பவர் பேசியபோது, ’கர்ப்பிணி என்ற ஒரு காரணத்திற்காக வீடு வாடகைக்கு விட மறுத்துள்ளது மனித உரிமைகளுக்கு எதிரானது.
இது கர்ப்பிணி பெண்ணை அவமதிப்பதற்கு ஈடானது. எனவே, கர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.