கர்வா சவுத்தன்று பொதுமக்களுக்கு ஹெல்மெட் பரிசு வழங்கிய போலீசார்..!!

223

கர்வா சவுத் என்பது வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர். இந்த உண்ணாநோன்பு உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டிற்கான கர்வா சவுத் தினம் நேற்று (8-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இத்தினத்தையொட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி போலீசார், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஜோடியாக வந்த கணவன்-மனைவிகளை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஹெல்மெட்களை பரிசாக அளித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் லக்னோ மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “லக்னோவின் பெண்கள் கர்வா சவுத் தினத்தன்று பாதுகாப்பாக இருந்தனர் மேலும் மக்கள் ஹெல்மெட் அணிவதை தங்கள் பழக்கங்களுள் ஒன்றாக கொண்டு வந்தனர், மக்கள் அதை வரவேற்றனர். இது சத்தியம்”, என்றார்.

SHARE