கண்டி, கலஹா மருத்துவமனை வளாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் இருந்த மருத்துவமனை பொறுப்பதிகாரி பொலிஸ் சீருடையில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
கலஹா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருத்துவமனை வளாகத்தில் நேற்று பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு ஒன்று கூடிய சுமார் 700 பேரை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சல் காரணமாக சங்கர் சவீ என்ற குழந்தை பெற்றோர்களால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், உரிய நேரத்திற்கு சிகிச்சை வழங்கப்படாததாலேயே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து குழந்தையின் பெற்றோரும், பிரதேச மக்களும் வைத்தியசாலையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்திற்கு காரணமான வைத்தியர்களை கைது செய்யுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனை பொறுப்பதிகாரி பொலிஸ் சீருடை அணிவிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.