கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் எஸ்.பிக்கு தொடர்பா?

280
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றிலிருந்த கலைப்பொருட்கள் களவாடப்பட்ட விடயத்தில் முன்னாள் உயர் கல்வியமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எஸ்.பீ.திஸாநாயக்க சந்தேக நபரா என்பதை ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டிருந்த போதிலும் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

குறித்த சம்பவத்தின் சந்தேக நபர் யார் என கூறுமாறு எஸ்.பி.திஸாநாயக்க சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தவராஜா நீதிமன்றில் கோரியுள்ளார்.

சந்தேக நபர் எஸ்.பீ.திஸாநாயக்க என கட்டுகதைகள் பரவிக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சந்தேக நபரா இல்லையா என்பது தொடர்பில் விசாரணைகள் நிறைவடையவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தங்களால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு 7 இல் உள்ள குறிப்பிட்ட கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் சிவா சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமானதெனவும் அவர் உயிரிழந்த பின்னர் அவரது சொத்துக்கள் கொழும்பு பல்கலைககழகத்திற்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE