1983 களில் இடம்பெயர்ந்த வவுனியா கல்நாட்டிகுளம் கிராம மக்களை மீள்குடியேற்ற
வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள கல்நாட்டினகுளம் கிராமத்திலிருந்து
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய டாக்டர் ப.சத்தியலிங்கம்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள
கல்நாட்டினகுளம் மிகப்பழைய கிராமமாகும். இற்றைக்கு 300 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள்
வாழ்ந்து வந்த கிராமாகும். வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இருக்கும் இந்த
கிராமமானது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1977 களிலும் அதனை
தொடர்ந்து 1983 காலப்பகுதியிலும் பேரழிவுகளை சந்தித்த கிராமமாகும். விவசாயத்தை
ஜீவனோபாயமாக கொண்டுள்ள இந்தக்கிராமத்தை சேர்ந்தவர்கள் 1983 காலப்பகுதியில் தமது
கிராமத்தை விட்டு முற்றாக வெளியேறினர். அதன் பின்னர் அருகிலுள்ள வேப்பங்குளம்
மற்றும் கல்நாட்டினகுளத்தின் உள்பகுதியில் குடியேறியுள்ளபோதும் எல்லைப்
பகுதியிலிலுள்ள பாரம்பரிய பழைய கிராமத்தில் மக்கள் இதுவரை குடியேறவில்லை.
இந்தநிலையில் மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் அவர்களின்
கவனத்திற்கு இந்தவிடயம் என்னால் கொண்டுசெல்லப்பட்டது. கடந்தமாதம் சிதம்பரநகர் நிகழ்வுக்கு
வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சரை மேற்படி கிராமத்திற்கு அழைத்து சென்று மக்களுடன்
கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களால் தமது தேவைகள் தொடர்பில் கோரிக்கை மனு
அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது மீள்குடியேறவுள்ள மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அறிக்கை
சமர்ப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்ட அரசாங்க அதிபர்
கோரப்பட்டுள்ளார். அறிக்கை சமர்பிக்கப்பட்டதும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.