கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமுயர்த்தப்படவேண்டும்.

352

 

1993இல் அமைச்சரவை அங்கீகாரமளித்த 28 பிரதேச சபைகளுள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை மட்டும் இன்னும் தரமுயர்த்தப்படாமல் அரசியல்வாதிகளால் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் குற்றஞ்சாட்டினார்.

52

32 ஆயிரத்துக்கும் மேல் தமிழ் மக்கள் வாழும் இந்தப் பிரதேச சபையை பிரதேச செயலகமாக தரமுயர்த்தி மக்களுக்கு சேவையைப் பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட 8 அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டி வலியுறுத்திய அவர், மேலும் தெரிவிக்கையில்:- கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமுயர்த்தப்படவேண்டும். இந்தப் பிரதேச சபை பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படவேண்டும் என்பதற்கு 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்தது. இருப்பினும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை விடுக்கப்படாமல் அரசியல்வாதிகளாலும், குறிப்பிட்ட நபர்களாலும் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மக்களுக்கு சேவையை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது மனித உரிமை மீறலாகும். 1993இல் 28 பிரதேச செயலகங்களை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதில் 29 பிரதேச சபைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை மட்டும் இன்னும் தரமுயர்த்தப்படவில்லை. இந்தக் கல்முனை வடக்கு பிரதேச சபைப் பிரிவில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 31 கிராமசேவகர் பிரிவுகள் இருக்கின்றன. இருப்பினும், அமைச்சரவை அங்கீகாரமளித்த இந்தப் பிரதேச சபை இன்னும் தரமுயர்த்தப்படவில்லை. ஆனால், இறக்காமத்தில் 12 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். 12 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன. சாய்ந்தமருதில் 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். 17 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன. இந்நிலையில், 32 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் 31 கிராமசேவகர் பிரிவுகளைக்கொண்ட கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை இன்னும் தரமுயர்த்தப்படவில்லை. இது முழுமையான புறக்கணிப்பா? அரசியல் பழிவாங்கலா என்று தெரியவில்லை. எது எவ்வாறிருப்பினும், இந்தப் பிரதேச சபை, பிரதேச செயலகமாக தரமுயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் –

SHARE