ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் படம் எடுத்து வெளிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு செய்வதால் ஏனைய மாணவர்களுக்கு உளத் தாக்கம் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுக் கல்வியமைச்சால் சுற்று நிரூபமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க. பொ. த சாதாரணதரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்றுக் கொள்ளாதவர்கள் கூட உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாய்ப்புக்களுண்டு.
எனவே, கல்வியமைச்சின் சுற்று நிரூபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மாணவர்களைத் தட்டிக் கொடுத்தல் என்பது ஒரு உளவியல் சார்ந்த செயற்பாடாகும். பாராட்டுவதன் மூலம் ஒரு மாணவனின் மன எழுச்சி உந்தப்பட்டு அவனது நடத்தைக் கோலங்களும், செயற்பாடுகளும் முன்னோக்கி நகர்த்தப்படுகின்றன.
இதனால், அவனது எதிர்காலச் செயற்பாடுகள் சிறப்பான வகையில் அமைந்து கல்வியில் முன்னேற்றமடையவும், உயர் கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவும் வழிசமைக்கும்.
தற்போது தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையான பொதுப் பரீட்சை முடிவுகள் மாணவறுகளுக்கும், பெற்றோர்களுக்குமிடையில் ஒரு வெகுமதியாகவே கருதப்படுகின்றது.
அத்துடன் ஒரு கெளரவமாகவும் கருதப்படுகின்றது. ஆனால், சித்தியடையாத மாணவர்கள் தொடர்பிலும் நாம் கரிசனை கொள்ள வேண்டியவர்களாகவிருக்கின்றோம்.
அத்தகைய மாணவர்கள் மீது அக்கறை கொண்டு ஊக்குவிப்பும் வழங்கி அம் மாணவர்களையும் உளவியல் தாக்கத்திலிருந்து விடுவித்து அவர்களும் சமாந்தரமாக உயர் கல்வி கற்கும் வழி வகை செய்யப்பட வேண்டும்.
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் படம் எடுத்து வெளிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு செய்வதால் ஏனைய மாணவர்களுக்கு உளத் தாக்கம் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுக் கல்வியமைச்சால் சுற்று நிரூபமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஏன் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவ்வாறு செய்தாரோ தெரியவில்லை? அவ்வாறு அவர் செய்தால் பாடசாலைகளில் பரிசளிப்பு விழாக் கூடச் செய்ய முடியாத நிலையேற்படும்.
ஆனால், டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளில் பரீட்சைகள் ஒரு வயதை எட்டிய பின்னர் தான் இடம்பெறுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.