கல்வியினாலேயே எமது சமூகத்தை உயர்த்த முடியும் – கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்

741
கல்வி இல்லா விட்டால் எமது சமுதாயத்திற்கு எந்த பலாபலன்களையும் பெற்றுக் கொடுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சரும்,இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் நம் நமக்காக  மட்டும் படித்திருந்தாலும் இனிவரும் காலங்களில் எமது சமுதாயத்திற்காகவும் படிக்க வேண்டும்.இவ்வாறு செயற்படும் போதே எமது இனத்தினை முன்னேற்றமுடியும். தற்போதைய சூழ்நிலையில் எமது தமிழ் இனத்தின் பலமும் கல்வியில் தான் தங்கியிருக்கின்றது.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஆசிரியர்கள் தமக்குள் இருக்கும் கல்வியை,மாணவர்களுக்கு ஊட்டி அவர்களை தாமாகவே முன்வரச் செய்வது தான் கல்விச் செயற்பாடு. கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு ஊன்றுகோலாகவே விளங்குகின்றது.

ஏழைகளின் முக்கிய பலமும் கல்விதான். கல்வியின் மூலம் தான் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தினைப் பெற முடியும். அது மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோருக்கும் நமது சமூகத்திற்கும் பெருமையைத் தேடித் தரும். மாணவர்கள் உறுதியுடன் இதற்கான கனவினைக் காண வேண்டும்.

நாம் சாப்பிடுவதற்கு மட்டும் பிறந்தவர்கள் என்று அல்லாமல் சாதிக்கவும் பிறந்தவர்கள் என்பதை இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும். பூவில் இருந்து ஒரு வண்ணத்துப்பூச்சி எவ்வாறு தேனை உறிஞ்சி எடுக்கின்றதோ அது போல் மாணவர்களும் புத்தகம் எனும் பூவில் இருந்து கல்வி எனும் தேனை தேடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

நாம் நினைப்பது தான் நடக்கும்,நினைக்காதது கிடக்கும் என்பார்கள் அதுபோல் எமது விடயங்கள் பற்றி எப்போதும் நினைக்க வேண்டும்.நினைத்து நினைத்து அதனை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேட்டை வாளிக் குழவிகள் எவ்வாறு ஒரு புழுவினை வேட்டைவாளியாக மாற்றி எடுக்கின்றதோ அதுபோல் பெற்றோர்களும்,ஆசிரியர்களும் மாணவர்களை கல்வி மான்களாக மாற்ற வேண்டும்.

அந்தப் பாரிய பொறுப்பு இவர்களிடத்தே அதிகம் தங்கியிருக்கின்றது. பிள்ளைகளை வளர்ப்பதில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருத்தல் கூடாது அவர்களின் கல்வி விடயத்திலும் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டும்.

உழைப்பு என்பது எமக்கு பரம்பரையாக இருக்கும் சொத்து. நாம் பயிர்களை வளர்ப்பதைப் போன்றே எம் உயிரான பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். பிள்ளை படிப்பதற்கு பெற்றோர்கள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.

பிள்ளை படிக்கும் போது அதன் அருகில் ஆதரவாக இருந்து அப்பிள்ளையைத் தட்டிக் கொடுத்தாலே போதும். எமது பிள்ளைகளை எமது மனதில் நினைத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர்களுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டும்.

எமது பிள்ளைகளை குறைந்தது உயர்கல்வி வரைக்குமாவது உயர்த்திச் செல்வது பெற்றோர்களின் கடமையாகும். அதுபோல் ஆசிரியர்களுக்கும் இதில் பாரிய பங்கு உண்டு. ஆசிரியர்கள் இதயத்தில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் பல ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். அது போல் அனைத்து ஆசிரியர்களும் இதயத்தில் இருந்து கல்வி சொல்லிக் கொடுத்தால் கல்வித்துறையில் நிச்சயம் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.

இன்றைய காலத்தில் எமது தமிழ் இனத்தின் பலமும் கல்வியில் தான் தங்கியிருக்கின்றது. கல்வி இல்லா விட்டால் எமது சமுதாயத்திற்கு எந்த பலாபலனையும் பெற்றுக் கொடுக்க முடியாது. இதுவரை காலமும் நமக்காக மட்டும் படித்திருந்தாலும் இனி எமது சமுதாயத்திற்காகவும் படிக்க வேண்டும்.

இவ்வறு செயற்படும் போதே எமது இனத்தினை முன்நிலைக்கு கொண்டு வர முடியும். தற்போதைய கால கட்டத்தில் அனைவருக்கும் சட்டம் ஒன்று என்ற ரீதியில் அனைவரும் அதனை மதிக்க வேண்டும். சட்டம் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாத சூழ்நிலையே தற்போது இருக்கின்றது.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி சீகிரிய சுவரில் எழுதியமையால் சிறை தண்டணை அனுபவித்து வருகின்றார். ஆனால் தற்போது அப்பெண்ணிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை நம் அனைவருக்கும  மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் விடுதலைக்காக பல தரப்பாலும் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இவ்வாறான விடயம் தெரியாமல் செய்ததாக யாரும் சொல்ல முடியாது அவ்வாறு விண்ணப்பித்திருப்பின் அவை நிராகரிக்கப்பட்டிருக்கும்.

எனவே நாம் எமது குற்றத்தை ஒப்புக் கொண்டு தவறு செய்து விட்டோம் இனி தவறு நடக்காது எமக்கு மன்னிப்பு தாருங்கள் என்றே எமது விண்ணப்பங்கள் அமைந்தன அப்போதுதான் மன்னிப்பு வழங்குபவருக்கு அதனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதாவது ஏற்படும்.

ஏனெனில் ஜனாதிபதி எடுக்கின்ற நடவடிக்கை எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலே அமைய வேண்டும். அந்தவகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டே அப்பெண் தற்போது விடுதலை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இது எமது சமுகத்திற்கான ஒரு படிப்பினையாகவே இருக்கின்றது. எனவே மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE