கல்வியில் முன்னேற்றம் காணும் போது தான் நாங்கள் பலமாக இருக்க முடியும் – சிவஞானம் சிறிதரன்

307

tna-trinco1

கல்வியில் நாங்கள் முன்னேற்றம் காணும் போது தான் நாங்கள் பலமாக இருக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலைப்பாடு கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று(02) மாலை அந்தக் கிராமத்திற்கு சென்று மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வலைப்பாடு கிராமத்தில் குடி நீர் பெற்றுக் கொள்வதில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், போக்குவரத்து வீதிகள் புனரமைக்கப்படாமை, பாடசாலைக்கான காணி உரிமை தொடர்பில் உள்ள பிரச்சினைகள், இயற்கை சமநிலையை பாதிக்கும் வகையில் பொன்னாவெளிப் பகுதியில் கல் அகழ்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தமது கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் முன் வைத்துள்ளனர்.

இதன் போது அவர், கல்வியில் நாங்கள் முன்னேற்றம் காணும் போது தான் நாங்கள் பலமானவர்களாக இருக்க முடியும். நாங்கள் பலமானவர்களாக இருக்கும் போது தான் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே கல்வி எங்களின் அழியாத மூலதனம் அதனைக் கட்டியெழுப்ப வேண்டும். பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஏனைய வீதிப் புனரமைப்பு தொடர்பிலும் குடி நீர் தொடர்பிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றேன். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்னாவெளி பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான கல் அகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் கல் அகழ்வுகளை மேற்கொள்ளும் போது கடல் நீர் உட்புகுவதால் எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இப்பகுதியில் கல் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதா என்கின்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றன. இது தொடர்பில் மக்கள் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் வலைப்பாடு பங்குத் தந்தை, மீனவர் சங்க பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

SHARE