கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்களே

164
(நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)
கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்களே எனும் வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை கல்வி அமைச்சு யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தின் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
  
  
கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்களே எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டமும் வாசிப்பின் மூலம் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (06.06.2018) கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க  அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான உட்பட பாடசாலை அதிபர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தீக்கிரையாக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் அங்கிருந்து எரிக்கப்பட்ட 95000 புத்தகங்களை இன்னும் அங்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. யாழ் வாசிகசாலையானது ஆசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வாசிகசாலை என்பது நாம் அனைவரும் அறிவோம். மிக விரைவில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படவுள்ள புத்தகங்களின் ஒரு தொகுதியை யாழ் நூலகத்திற்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எனவே அந்த நிகழ்வை ஒரு தேசிய நிகழ்வாக நடாத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதற்கு காரணம் இந்த அரசாங்கம் இன்று கல்விக்காக பாரிய தொகையை ஒதுக்கியுள்ளது. அதன் பலன்களை தற்பொழுது படிப்படியாக எமது மாணவர்கள் அனுபவித்து வருகின்றார்கள். அதேநேரத்தில் இந்த  நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்களே எனும் கல்வி அமைச்சின் தேசிய தமிழ் மொழி மூலமான நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதன் மூலமாக அங்கிருக்கின்ற மாணவர்கள் மத்தியிலும் வாசிப்பு திறமையை அதிகரிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE