களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழிந்தோட சில நாட்கள் ஆகும்

273

சீரற்ற காலநிலையுடன் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 99 ஆயிரத்து 238 குடும்பங்களை சேர்ந்த நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 806 பேர் 611 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழிந்தோடுவதற்கு இன்னும் சில தினங்கள் செல்லும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாகலங்கம் தொடக்கம் அவிசாவளை வரையான களனி கங்கையை அண்டிய பகுதிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

இதுதவிர, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய பகுதியிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்றையதினம் நாவலப்பிட்டி, வேரவலகந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 150 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அதே கிராமத்தில் தங்கியுள்ள நிலையில், ராணுவத்தினரும், அயல் பிரதேச வாசிகளும் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.

அசாதாரண காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரம் பேர் வரை அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Kelaniya

SHARE