கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவரின் கணவர் அவர்களது வீட்டின் அறையொன்றில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இவர், 39 வயதானவர் எனவும், ஒரு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், கராப்பிட்டியவில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் மனைவியுடனும், ஒன்றரை வயதான பிள்ளையுடனும் வசித்துவந்தார் எனவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நேற்றிரவு அவரது அறையிலிருந்து கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அவரது சகோதரரும் வீட்டில் இருந்ததுடன் அவர் கழுத்தை தானாகவே வெட்டிக்கொண்டாரா அல்லது வெட்டப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.