காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம்.

240

 

oddisuddanமகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்களுக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் முடிவு கிடைக்கும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்றவர்கள் மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் ஆளும் கட்சியில் இணைந்து அமைச்சு பதவியை பெற்று அதிகாரிகளை அடக்கி தாம் நினைத்ததை சாதித்து வந்தனர். மகிந்த காலத்தில் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள் ஆட்சிமாற்றத்தின் பின் அடங்கி போனாலும் புதிய அரசாங்கத்திலும் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்றவர்களின் அடாவடித்தனங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தமிழ் பிரதிநிதிகளுடனும் வடமாகாண முதலமைச்சருடனும் அவர் நடந்து கொண்ட முறை தமிழ் முஸ்லீம் மக்களிடையில் விரிசல்களையே ஏற்படுத்தும்.

முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் தமிழ் மக்களை அம்மாவட்டத்தில் சிறுபான்மையாக்கும் முயற்சியா என்ற சந்தேகமும் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவாகும். இம்மாவட்டத்தில் இருந்த மக்கள் தமது வீடு வாசல்களை முற்றாக இழந்து இடம்பெயர்ந்திருந்தனர். ஆனால் மீள்குடியேற்ற விடயத்தில் முஸ்லீம் சிங்கள இனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே அம்மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்காக ஜனாதிபதியினால் வடமாகாண மீள்குடியேற்ற செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

வடபகுதியில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களாகும். ஆனால் வடமாகாண மீள்குடியேற்ற செயலணிக்கு நியமிக்கப்பட்டவர்களில் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளோ அல்லது வடமாகாண முதலமைச்சரோ இக்குழுவில் இடம்பெறவில்லை.
அமைச்சர் றிசாத் பதியுதீன், கண்டி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காசிம், கொழும்பை சேர்ந்த அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரே வடமாகாண மீள்குடியேற்ற செயலணியின் உறுப்பினர்களாகும்.

வடமாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையும் அதற்கு ஒரு முதலமைச்சரும் இருக்கும் வேளையில் அவரையோ அல்லது வடமாகாணத்தில் இருக்கும் 13 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரையோ மீள்குடியேற்ற செயலணியில் இணைத்து கொள்ளாததேன்?

இந்த செயலணியில் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கு வடமாகாணம் பற்றிய அறிதல் மிகக்குறைவே. வடமாகாணத்தில் குடியேற்றப்படுபவர்கள் சிங்களவர்களா முஸ்லீம்களா தமிழர்களா என்ற அக்கறையும் அவருக்கு கிடையாது.

வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடமாகாண முதலமைச்சர் அல்லது வடமாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படாததன் உள்நோக்கத்தில் சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் வடமாகாண சனத்தொகையில் 93.29வீதம் தமிழர்களும், 3.6வீதம் முஸ்லீம்களும், 3.2வீதம் சிங்களவர்களும் வாழ்கின்றனர். யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் இந்த 93 வீதமாக இருக்கும் தமிழர்கள் தான். இந்நிலையில் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை புறந்தள்ளிவிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் அமைக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தகவல்களின் படி 1044 தமிழ் குடும்பங்களும், 902 முஸ்லீம் குடும்பங்களும் 270 சிங்கள குடும்பங்களும் காணிக்கு விண்ணப்பத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் காணிச்சட்டத்தின் படி ஒருவர் குடியிருப்பதற்கான காணி ஒன்றிற்கு விண்ணப்பிக்கும் போது அவர் முன்னர் இருந்த இடத்தில் எவ்வித சொத்துக்களும் காணிகளும் இல்லை என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் தொழில் என்பனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

1990களில் இடம்பெயர்ந்து புத்தளம் உட்பட வடமாகாணத்திற்கு வெளியில் 25வருடங்களுக்கு மேலாக வசித்தவர்கள் மீண்டும் வடக்கில் மீளக்குடியேறுவதற்காக காணிக்கு விண்ணப்பதாக இருந்தால் அவர்கள் வேறு இடங்களில் காணி இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதனைப் புத்தளத்தின் அந்தக் குடும்பம் வசித்த பிரதேசத்துக்குரிய பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தி, புத்தளம் மாவட்ட அரச அதிபரும் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்திய பத்திரத்தை முல்லைத்தீவு அரச அதிபர் செயலகத்தில் ஒப்படைத்தாலே புத்தளத்திலிருந்து வந்த குடும்பத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்வதற்கும், அரச பதிவுகளில் இடம்பெறுவதற்கும் அனுமதியளிக்கப்படும். இதுவே இலங்கையில் இருக்கின்ற பொதுவான நடைமுறை.

ஆனால் முல்லைத்தீவு வவுனியா மன்னார் மாவட்டங்களில் குடியேற்றப்படும் முஸ்லிம் குடும்பங்கள் இந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீனால் உருவாக்கப்பட்ட இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் கையெழுத்திட்டு அனுப்பும் விண்ணப்பப் படிவத்தை மீள்குடியேற விரும்பும் பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களில் ஒப்படைத்தால் அதனை வைத்துக்கொண்டு பதிவினை மேற்கொள்ள வேண்டியதுதான். எந்த அதிகாரியும் விளக்கம் கேட்க முடியாது. அந்த விண்ணப்பத்தில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விடயங்ளே குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த நடைமுறையால் புத்தளத்தை அல்லது மாவனெல்லையை பூர்வீகமாக கொண்ட முஸ்லீம் குடும்பம் விரும்பினால் வடமாகாணத்தில் மிக இலகுவாக காணி ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறுதான் சமுர்த்தி நிவாரணம் உட்பட பல நிவாரணங்களை பாதிக்கப்படாத வெளிமாவட்ட முஸ்லீம்கள் பெற்று வருகிறார்கள் என முல்லைத்தீவில் உள்ள தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறுதான் கடந்த வருடத்தில் முல்லைத்தீவு முள்ளியவளையில் 600க்கு மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் 1990களில் இடம்பெயர்ந்து சென்ற மக்களா அல்லது புத்தளம் மாவனெல்லை போன்ற பகுதிகளின் நிரந்தர குடியிருப்பாளர்களா என்பது யாருக்கும் தெரியாது.

மன்னார், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் முதற்கட்டமாக 10ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றுவதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறார் என்றும் இதன் மூலம் இந்த மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களே பெரும்பான்மையாக வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையின் மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைக்கும் நோக்குடன் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் திட்டமிட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓவ்வொரு மாவட்டத்திலும் இனவிகிதாசாரப்படியே காணிகள் வழங்கப்பட வேண்டும். இனவிகிதாசாரத்தை புறந்தள்ளிவிட்டு குடியேற்றங்களை செய்தால் எதிர்காலத்தில் இனப்பரம்பலில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். உதாரணமாக 93வீதமாக இருக்கும் தமிழர்கள் 40வீதமாகவும், 6வீதமாக இருக்கும் முஸ்லீம் சிங்கள இனங்கள் 60வீதமாகவும் மாறும் அபாயம் காணப்படுகிறது.

இதனாலேயே கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இனவிகிதாசாரப்படியே காணிகள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதனை நிராகரித்து தாம்மால் தரப்படும் பட்டியலில் உள்ளவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரினார்.

வழமையாகவே இவ்வாறான கூட்டங்களில் தமிழ் அதிகாரிகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் அடக்கும் வகையிலேயே றிசாத் பதியுதீன் அதிகாரத்தொனியில் பேசுவது வழங்கமாகும்.

கடந்த வாரம் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் ஒரு தொகுதி முஸ்லீம் மக்களை குடியேற்றம் செய்வதற்கான முதல்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குடியேற்றத்தை மேற்பார்வை செய்வதற்காகவும் கொழும்பில் இருந்து அதிகாரிகள் வந்த போது அவர்களுக்கும் அப் பகுதியை சேர்ந்த மக்களுக்கும் இடையில் இக்குடியேற்றதிற்கு எதிராக வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

கூழாமுறிப்பு பகுதியில் உள்ள அரச காணிகளாக உள்ள காடுகளை அழித்து அங்கு 500க்கு மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றுவதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான வடமாகாண மீள்குடியேற்ற செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கு அமைச்சர் சுவாமிநாதனின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாக பொருத்து வீடுகளும் வழங்கப்பட உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியையும் அமைச்சர் சுவாமிநாதன் பெற்றிருந்தார். இந்த பொருத்து வீடு என்ற திட்டம் தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதனுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும்வாக்கு வாதம் நடைபெற்றுவருகிறது. தாம் இந்த பொருத்து வீட்டு திட்டத்தை நிராகரிப்பதாகவும் இது வடபகுதி மக்களுக்கு ஏற்றதல்ல, கூடுதல் செலவில் பொருத்தமற்ற வீடுகளை அமைப்பதற்கு நாம் சம்மதிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

வடமாகாணத்திற்கு பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என வடமாகாணசபை இவ்வருட ஆரம்பத்தில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தது.

ஆனால் பொருத்து வீடுகளை அமைப்பேன் என அடம்பிடித்து வரும் அமைச்சர் சுவாமிநாதன் இப்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேற்றப்பட உள்ள 10ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களுக்கு பொருத்து வீட்டை அமைத்து கொடுக்க உள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியோ அல்லது வடமாகாணசபையின் அனுமதியோ இன்றி முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் ஒரு தொகுதி முஸ்லீம் மக்களை குடியேற்றம் செய்வதற்கான முதல்கட்ட வேலைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்குடியேற்றத்தை மேர்பார்வை செய்வதற்கும் வீடுகளை அமைப்பதற்கும் அப்பிரதேச உள்கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்குமாக கொழும்பில் உள்ள அதிகாரிகள் கடந்த வாரம் அப்பகுதிக்கு வந்த போதே அக்காட்டு பகுதியில் குடியேற்றங்கள் நடைபெறுவதை அப்பிரதேச மக்கள் அறிந்து கொண்டனர்.

சில பொது மக்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து அதிகாரிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதோடு இப்பகுதியில் பூர்வீகமாக மக்கள் வாழ்ந்திருந்தால் குடியேற்றம் செய்வதில் ஆட்சேபனை இல்லை எனவும் புதிய குடியேற்றங்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.

அப்பகுதியில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்திருந்தால் அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஆனால் புதிதாக காடுகளை வெட்டி அங்கு குடியேற்றங்களை செய்வதனை தாம் ஆட்சேபிப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பெருமெடுப்பிலான சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள் பூர்வீகமாக வாழும் தமக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே மன்னார் தொடக்கம் முள்ளியவளை வரைக்குமான காடுகள் அழிக்கப்பட்டு அங்கு சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள் இடம்பெற்றுவருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர்.

மாவட்ட அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களும் காணி அதிகாரிகளும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பயந்து நீதிக்கு புறம்பான வகையில் அம்மாவட்டங்களில் வசிக்காத வெளியிடங்களை சேர்ந்தவர்களுக்கு காணிகளை வழங்கி வருகின்றனர் என முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கான காணி விடயத்தில் எந்த அக்கறையும் செலுத்தவில்லையென்றும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலையம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீகக்காணிகளை கையப்படுத்தல், சட்டவிரோத மீன்பிடித்தொழில், காடழிப்பு போன்ற விடயங்களில் எந்தவித கரிசனைகளும் காட்டாத அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளிமாவட்டத்தவர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றவதிலேயே தீவிரம் காட்டி வருகிறார் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை இந்த சட்டவிரோத காடு அழிப்பும் குடியேற்றங்களும் இடம்பெறுவதை கூகிள் காணொளியில் காணமுடிகிறது என தெரிவித்திருந்தார்.

காணி அதிகாரம் மாகாணசபைக்கு உண்டு. ஆனால் வடமாகாணத்தில் காணி அமைச்சரான முதலமைச்சருக்கு தெரியாமலே இதுவரை 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இரு நோக்கங்களுக்காக இந்த காடுகள் அழிக்கப்படுகிறது. ஒன்று திட்டமிட்ட குடியேற்றங்களை செய்து தமிழ் மக்களை சிறுபான்மையாக்குவது. இரண்டாவது பெறுமதி மிக்க தேக்கு உட்பட மரங்களை வெட்டி தென்னிலங்கைக்கு கொண்டு சென்று விற்பது. இதனால் கோடிக்கணக்கான சொத்துக்களை இதன் மூலம் சேர்த்துள்ளளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் வீதியில் அகதிகளாக இருக்கும் போது எங்கிருந்தோ வந்தவர்கள் காடுகளை அழித்து வளங்களை சூறையாடுவதும், திட்டமிட்ட ரீதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை குடியேற்றுவதும் நல்லாட்சி என்று தனக்கு பட்டம் சூட்டிக்கொண்ட மைத்திரி ஆட்சியில் தான் நடக்கிறது.
( இரா.துரைரத்தினம் )

SHARE