காட்டை அழித்து முஸ்லிம் மக்களுக்கு குடியிருப்பு அமைப்பதை வேடிக்கை பார்ப்பதா? – து.ரவிகரன் 

155

தமிழ் மக்களின் காணிகளை காடுகளாக அடையாளப்படுத்தி அபகரித்த வனவள பாதுகாப்பு திணைக்களம், தற்போது வளமான காட்டை அழித்து முஸ்லிம் மக்களுக்கு குடியிருப்பு அமைக்கவுள்ளதை எந்த அடிப்படையில் வேடிக்கை பார்ப்பது என வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும், 1984ஆம் ஆண்டு கொக்கிளாய், கொக்கு தொடுவாய், கருணாட்டு கேணி போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்ட பின் அந்த மக்களுடைய காணிகளும், 1982ஆம் ஆண்டு ஒதியமலை மற்றும் அதனோடு இணைந்த கிராமங்களை சேர்ந்த மக்களுடைய காணிகளும் காட்டு பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் சுமார் 15,183 ஏக்கர் அளவிலான மக்களுடைய குடியிருப்பு மற்றும் நீர்ப்பாசன காணிகளை, காட்டு பகுதிகள் என அடையாளப்படுத்தி வனவள பாதுகாப்பு திணைக்களம் அபகரித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கின்றது.

ஆனால் தற்போது 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றார்கள். அவர்கள் திரும்பி வருகிறார்கள் என கூறிக்கொண்டு வளமான காட்டுப்பகுதியை அழித்து குடியிருப்பு உருவாக்குவதை வனவள பாதுகாப்பு திணைக்களம் பார்த்து கொண்டிருக்கின்றது.

அதாவது தமிழ் மக்களின் குடியிருப்பு காணிகளை காடுகளாக அடையாளப்படுத்தி அபகரித்த வனவள திணைக்களம், காடுகளை அழித்து முஸ்லிம் மக்களுக்கு குடியிருப்பு உருவாக்கிக் கொடுப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

இந்த விடயத்தை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம்.

இதேபோல் 2015.07.12ஆம் திகதி மாவட்ட செயலகம் வெளியிட்ட தகவல்களின் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 2084 தமிழ் குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. அதேபோல் 902 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணிகள் இல்லை.

இங்கே 2084 குடும்பங்கள் தொடர்பில் சிந்திக்காமல் 904 குடும்பங்களை பற்றி மட்டும் சிந்தித்து அவர்களுக்காக இயற்கை வளங்களை கூட அழிக்கலாம் என நினைக்கும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகள் தொடர்பாகவும், முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE