இனவாதிகளின் கூச்சலுக்கு அஞ்சி, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முடியாது. இனி இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடமில்லை என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் ஊடாக நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை தாமதிக்கப்படாது கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
குறித்த அலுவலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கூச்சலிடுகின்றார்கள் என்பதற்காக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற உரிமையை யாரும் மறுக்க முடியாது. இனி இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.