புத்தளம், தப்போவ பிரதேசத்தில் காணாமல்போன சிறுமியொருத்தி இன்று அதிகாலை தப்போவை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பாழுங்குகையொன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு மணியளவில் தப்போவ, கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் தினிதி அசன்ஸா என்ற மூன்றரை வயதுச் சிறுமி காணாமல் போயிருந்தாள். இதனையடுத்து உறவினர்களும் பொலிசாரும் இணைந்து சிறுமியைத் தேடுவதற்கான கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியைத் தேடிச் சென்றவர்கள் தப்போவ அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியொன்றின் மத்தியில் இருக்கும் பாழுங்குகையொன்றுக்குள்ளிருந்து இன்று அதிகாலை மூன்றரை மணியளவில் சிறுமியைக் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிசாரும் , பிரதேசவாசிகளும் இணைந்து குகை மற்றும் அதன் அயல்பகுதிகளை சல்லடை போட்டுத் தேடியபோதும் வேறு யாரும் அங்கிருந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குறித்த சிறுமிக்கும் தான் எவ்வாறு அங்கு கொண்டுவரப்பட்டார் என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அதே நேரம், காணாமல் போயிருந்த சிறுமி இன்று காலை புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாள்.