காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தங்களுடன் நடத்தப்படும் சந்திப்புக்கள் குறித்து எவ்வித தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், அவரது மனைவி சந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளனர்.
எனினும், இந்த சந்திப்பு குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது என சந்தியா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், சந்திப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் அடுத்த வாரமளவில் கருத்து வெளியிடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து தாம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடுவதனை தவிர்த்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து காணாமல் போனவர்களது உறவினர்களுடன் சந்திப்பு நடத்தி தகவல்களை திரட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்