நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்ட கெடஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 27ஆம் திகதியிலிருந்து காணமல் போன நிலையில் இன்று குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
71 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான ஆரோக்கியசாமி என்பவரே கடந்த 27ஆம் திகதியிலிருந்து காணவில்லை என நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படும் ஆரோக்கியசாமியின் உடைகள் மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மறே ஓயா பகுதியில் காணப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து நல்லத்தண்ணி பொலிஸார் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதில் இன்று பகல் 12:30 மணியளவில் மறே ஓயா நீர்வீழ்ச்சியில் குறித்த நபர் சடலமாக மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டனர் ஆரோக்கியசாமி ஜெபமாலை என அடையாளம் காணப்பட்டதுடன் இவரின் சடலத்தை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.