யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு புலமை பரிசில் ஒன்றை பெற்றுத் தருமாறும் வலியுறுத்தி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதியிடம் மகஜரொன்றையும் சமர்ப்பிக்க காணாமல் போனோரின் உறவினர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்று இந்த மகஜரை கையளிக்க இவர்கள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், பாதுகாப்பு பிரிவினர் இவர்களை அவ்வாறு செல்ல அனுமதிக்கவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரின் வாகனத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு இவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.