காணாமல் போனோர் தொடர்பில் அரசு கூறும் நொண்டிச்சாட்டால் ஏமாற்றமடைகிறோம் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம்

159

 

காணாமல் போனோர் தொடர்பாக அரசு கூறும் நொண்டிச்சாட்டால் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைகின்றது என வவுனியா வளாகத்தின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கத்தின் வவுனியா வளாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காணாமல் போன உற்றார் மற்றும் உறவினர்களிற்கும், தொடர்ச்சியாக அவர்கள் படும் இன்னல்களுக்கும், அரசு வெளியிடும் நொண்டிச்சாட்டுகளையும், மழுப்பலான அறிக்கைகளையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைந்துள்ளது.

2009ம் ஆண்டின் கடைசி யுத்த கட்டத்திலும், அதன் பின்னரும், இடம்பெற்ற உண்மைகளை அரசு வெளிவிடும் என்று பல வருடங்களாக பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் போராடிய வண்ணம் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயம் சம்பந்தமாக அரசு மற்றும் இராணுவம் இந்த மக்களிடம் காட்டும் அலட்சியப் போக்கினை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இல்லையா? அவர்கள் உயிருடன் இருந்தால் எந்த இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? யார் அவர்களைக் கொன்றது?

எப்படி? கொலை செய்த பின் அவர்கள் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்கள்? போன்ற அவர்களுடைய வலி நிறைந்த கேள்விகளுக்கான பொறுப்புடைய பதில்கள் தேவை. அல்லது அவர்களினுடைய காணாமல் போன மற்றும் கடத்திச் செல்லப்பட்ட உறவுகள் உயிருடன் இருக்கிறார்கள் எனின், அவர்களை மீண்டும் அவர்களினுடைய குடும்பத்தினருடன் உடனடியாக சேர்க்கவும் அதே நேரம் எல்லா அரசியல் கைதிகளை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டிக்கொள்ளுகின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காணாமல் போனவர்களின் வாழ்க்கை நிலையையும், உண்மையை தவிர வேறு வேண்டாம் என்ற இந்த மக்களின் நிலைப்பாட்டினையும், விடாமுயற்சியையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் தலை வணங்குகின்றது.

வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், திட்டவட்டமாக அரசிற்கும், இராணுவததிற்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவருவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் கடந்த பல தசாப்தங்களாக யுத்தத்தினால் பாதிப்படைந்து அதிர்ச்சியடைந்தவர்களை ஆற்றவும் கோரிக்கை விடுக்கின்றது. அவர்கள் இப்பொழுது உண்மையான, எளிமையான, நீதியான வாழ்க்கை ஒன்றை இலங்கைக்குடிமக்களாக வாழ்வதையே கோருகின்றனர். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு உண்மையை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு ஒரு வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE