காணாமல் போன சகலருக்கும், மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் ராஜித

257
காணாமல் போன சகலருக்கும், மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காணாமல் போனவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் உரையாற்றும் போது, யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

எனவே வடக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசின் முடிவென்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அமைச்சர் இங்கு மேலும் பதிலளிக்கையில்,

யுத்த காலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதன்போது வடக்கில் யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஏனெனில் நீண்டகாலமாக தமது உறவுகள் காணாமல் போனதால் அவர்களது குடும்பங்களை சார்ந்தோர் பல்வேறு விடயங்களில் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

எனவே அவ்வாறான சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Rajeetha

SHARE