எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான பூர்வாக பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஆரம்பித்துள்ளன.
இந்திய வர்த்தக அமைச்சின் இணைச் செயலாளர் பூமிந்தர் சிங் பல்லா தலைமையிலான நான்கு பேர் கொண்ட இந்திய பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பரந்த வரையறைகளை கொண்ட எட்கா உடன்படிக்கையில் எவ்வாறான விடயங்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்படுவதாக இந்திய பிரதிநிதியொருவர் கூறியுள்ளார்.
அத்துடன் பொருளாதார மாற்றங்களால் ஏற்படும் கவலை அளிக்கும் விடயங்கள் மற்றும் தேவைகள் குறித்தும் இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன் 2000 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள இந்திய- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து பெறப்பட்ட அனுபங்களையும் இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.