அமெரிக்காவில் காதலனை தற்கொலைக்கு தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பிய பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் Massachusetts பகுதியை சேர்ந்தவர் கான்ராட் ராய். இவரது காதலி மிச்செலி கார்டர்.
மிச்செலி கார்டர் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் அனுப்பிய குறுஞ்செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளான கான்ராட் ராய் அவரது காருக்குள் ஒருவித நச்சு வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. இச்சம்பவம் கான்ராட் ராய் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்கொலைக்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்தபோது மிச்செலி கார்டர் தனது காதலர் கான்ராட் ராய்க்கு தற்கொலையை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் காதலனுடன் டெலிபோனிலும் பேசி இருந்தார்.
அதில் தற்கொலைக்கு பல வழிகள் உண்டு எனக்குறிப்பிட்ட அவர், தூக்கில் தொங்கலாம், கட்டிடத்தில் இருந்து குதிக்கலாம், கத்தியால் குத்திக் கொண்டு சாகலாம் என்பன போன்ற தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
எனவே தற்கொலைக்கு தூண்டியதாக மிச்செலி கார்டர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 20 வயதான மிச்செலி கார்டருக்கு தற்கொலைக்கு தூண்டியதன் அடிப்படையில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தத்துவ ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் கார்டர் செய்து தவறுதான் என்றபோதும் அவர் தவறுதலாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி காருக்குள் சென்று நச்சு வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டது ராயின் முடிவு. அதில் கார்டரின் பங்கு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.