யானையின் காதுக்குள் எறும்பு புகுந்ததுபோல’ என்று ஒரு பழமொழி உண்டு. மிகப்பெரிய விலங்கான யானைக்குக்கூட காதில் பிரச்சினை என்றால் தாங்க முடியாது.
நமக்கும் காதில் வலி வந்துவிட்டால் எவ்வளவு அவதிப்பட்டு விடுகிறோம். காதுக்குள் சத்தம் கேட்பது, கேட்கும் திறன் பாதிக்கப்படுவது என்று காதுவலியுடன் சில துணை உபாதைகளும் சேர்ந்தே வரும்.
பொதுவாக, இன்பெக்ஷன் என்னும்தொற்று ஏற்படுவது, காதுக்குள் இருக்கும் மெழுகு போன்ற பசை அதிகரித்து செவிக்குழலை அடைத்துக்கொள்வது அல்லது உட்காதில் காயம் ஏற்படுவது போன்ற காரணங்களால் காதில் வலி ஏற்படுகிறது.
காதின் நடுப்பகுதி திரவம் உட்செவிக்குழல் என்னும் யூஸ்டசியன் குழலில் வழியும். செவிக்குழல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தொற்று ஏற்படுவதால் நடுக்காது பகுதியில் அடைப்பு உருவாகும்
இந்த திரவம் சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் தொற்று தீவிரமாகி காதுக்குள் அழுத்தம் ஏற்படும் உணர்வு உருவாகும்.
பெரும்பாலான நேரங்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சைனஸில் தொற்று, திடீரென அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல், தொண்டையில் ஏற்படும் தொற்று, தாடையில் ஏற்படும் ஆர்த்ரைடிஸ் பாதிப்பு, ஈறு மற்றும் பற்களில் ஏற்படும் தொற்று, செவிப்பறை கிழிதல், காதுக்குள் அதிகப்படியான மெழுகு சேர்தல் போன்றவை காதில் வலியை ஏற்படுத்துகின்றன. காதுவலி அதிகமாக இருந்தால், மருத்துவரை பார்ப்பது நலம். வலி குறைவாக இருந்தால், கை வைத்தியம் செய்யலாம்.
வெள்ளைப்பூண்டு
வெள்ளைப்பூண்டு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்க்கக்கூடியது. காதுவலியை போக்கக்கூடிய இயல்பு வெள்ளைப்பூண்டுக்கு உண்டு. வெள்ளைப்பூண்டு பல் ஒன்றினை எடுத்து நசுக்கி, சாறு எடுத்து ஒன்று அல்லது இரண்டு துளி காதில் விடவும். வலி குணமாகும் வரைக்கும் தினமும் இரண்டு வேளை இந்த வைத்தியத்தை கைக்கொள்ளவும்.
வெங்காயம்
வெங்காயத்துக்கும் வெள்ளைப்பூண்டை போன்று மருத்துவ குணம் உண்டு. காதுக்குள் பிரச்னையை கொண்டு வரும் கிருமிகளை இது அழிக்கும். வெங்காயம் ஒன்றை நறுக்கி துணிக்குள் வைத்து நசுக்கி, காதினுள் விட்டு ஐந்து நிமிடங்கள் விட்டு வைக்கவும். தினமும் இருமுறை இப்படி செய்யவேண்டும்.
இஞ்சி
நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் இஞ்சிக்கும் உண்டு. இது உங்கள் செவிக்குழலை சுத்தமாக்கி விரைவில் குணம் கிடைக்கச் செய்யும். இஞ்சியை துண்டாக்கி, சாறு பிழியவும்.
காதினுள் மூன்று சொட்டு விட்டு, பஞ்சினை கொண்டு அடைத்துக்கொள்ளவும். வலி குறையும் வரைக்கும் தினமும் செய்து வரவும். குறைவான வலி இருந்தால் இந்த முறைகளை கைக்கொண்டு நிவிர்த்தி பெறுங்கள். வலி தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பதே நல்லது.
தண்ணீர்
காதுக்குள் எறும்பு அல்லது பூச்சிகள் நுழைந்துவிட்டால், காதுக்குள் குடைந்து நம்மை படாத பாடு படுத்திவிடும். அதற்காக வருத்தப்படாதீர்கள். உடனே கொஞ்சம் தண்ணீரை எடுத்து காதுக்குள் விடுங்கள். எறும்பு மற்றும் வேறு பூச்சிகள் ஏதாவது இருந்தால் உடனே வெளியே தண்ணீரில் மிதந்து வந்து விடும்.