ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூலில் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் இன்று உள்ளூர் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்நிலையில், மைதான வாயிலில் அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியைக் கடந்து தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைய முயன்றான். இதைதொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவனை மடக்க முயன்றனர். ஆனால் அவன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து மைதானத்துக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு, தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், வெடிகுண்டு தாக்குதல் நடந்தபோது மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளார்கள் என தெரிவித்தனர்.