முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பாரிய மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக துரித வழக்கு விசாரணைகளை நடத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளது.
இதன் நீதிபதிகளாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா தீபானி ராஜரத்ன ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விசேட மேல்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள முதலாவது வழக்காக லிட்ரோ எரிபொருள் விற்பனை நிறுவனத்தின் நிதி துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2014-2015ம் ஆண்டு காலப் பகுதியில் லிட்ரோ நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி ஹெலன்கா ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் அன்றைய தலைவர் காமினி செனரத் மற்றும் பியதாச குடாபாலகே, நீல் பண்டார ஹபுஹின்ன, கே. லசந்த பண்டார ஆகியோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக 900க்கும் அதிகமான ஆவணங்கள் மற்றும் 63 சாட்சிகளைக் கொண்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்பான அழைப்பாணை சந்தேக நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.