காரைதீவு பிரதேசத்திலுள்ள 67 பழைமை வாய்ந்த கடலோரக்கிணறுகள் தகர்க்கப்பட்டுள்ளது

249

காரைதீவு பிரதேசத்திலுள்ள 67 பழைமை வாய்ந்த கடலோரக்கிணறுகள் தகர்க்கப்பட்டுள்ளதுடன் இக்கிணறுகள் பலவருடகாலமாக பயன்படுத்தாமலிருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை புல்டோசர் கொண்டு இக்கிணறுகளை தகர்த்துள்ளார்.

அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னீன்முத் டெங்கு நோய்த்தடுப்புச்செயற்றிட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பாவிக்கப்படாமலிருந்துவந்த இக்கிணறுகளில் டெங்குநோய் நுளம்புகளுக்கான வாழ்வியல் பருவத்தடயங்கள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கு முன்பு கடலோரத்திலிருந்த மக்களது குடியிருப்புகளின் கிணறுகளே அவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று ஆரம்பமான மிகத்தீவிரமான டெங்கு நோய் பரவும் இடங்களைத்தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் செயற்றிட்டம் தொடர்ந்து இரு தினங்கள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியபணிமனை ஊழியர்களோடு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று டெங்கு நோய்க்கான குடம்பிகளை வளர்க்க சாதகமாகச்செயற்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் தினங்களிலும் இவ்வாறான குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வீட்டுரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்திய அதிகாரி றிஸ்னீன் முத் குறிப்பிட்டுள்ளார்.

SHARE