காலம் எங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை. தரும் நம்பிக்கை கொள்ளுங்கள் என பாராளுமன்ற உருப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முழங்காவில் விளையாட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய மறைந்தவர்கள் ஞாபகார்த்த நினைவு வெற்றி கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டுள்ளார்.
மேலும், இன்று ஒர் அருமையான உதை பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு பெருமிதம் அடைகின்றேன். இங்கு ஓர் அணி வெற்றி பெற்றுள்ளது மற்றைய அணி வெற்றியின் சந்தர்ப்பத்தை விட்டு கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்கு யாரும் தோல்வி அடையவில்லை ஆகவே வெற்றி தோல்வி என்ற சந்தர்பங்களுக்கு அப்பால் வெற்றியும், வெற்றியை இழந்த சந்தர்பத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும். எங்களுடைய விளையாட்டும் அதன் ஊடாக வருகின்ற செய்திகளும் இந்த கதிரைகளில் அமர்ந்திருக்கும் நாளைய சந்ததியினருக்கு நல்ல செய்தியை கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கழகங்கள் ஊடாகத்தான் ஆரோக்கியமான நல்ல மனிதர்களை படைக்க, உருவாக்க முடியும். என்ற செய்தியைத்தான் விளையாட்டுக்கள் சொல்லுகின்றன.
இந்த கழகத்தில் ஓர் காலத்தில் தங்கள் கால்த்தடங்களை பதித்து ஓடித்திரிந்து, விடுதலைப் போராட்டதில் தங்களை ஆகுதியாக்கிய வீரர்களை நெஞ்சில் நிறுத்தித்தான் குறித்த வீர விளையாட்டு நடைபெறுகின்றது என கூறியுள்ளார்.
விளையாட்டு சாதாரனமானதல்ல. அது தன்னுடைய ஒரு வீரம் நிறைந்த இனத்திற்குரிய இலட்சிய வாழ்வையும் தேசிய அடையாளத்தையும் நிலை நிறுத்துகின்றது. எங்கள் மண்ணில் நாங்கள் வாழ்கின்ற, வாழ போகும் காலத்தை தீர்மானிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலம் கூட அரசியல் சூழல் நிலையில் மிக நெருக்கடியானது. இலங்கையில் அரசியல் யாப்பு கொண்டு வருவதற்கு முழு முயற்சிகளும் நடைபெறுகின்றது. இலங்கையிலே இன்று இரண்டு பிரதான அரசியில் கட்சிகள்ஒன்றிணைந்து சமாதானம் பற்றி பேசுகின்றன.
ஆனால் நாங்கள் பிரதான எதிர்கட்சி என்று இருந்தும் கூட அதற்கு அப்பால் எங்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இந்த அரசுக்கு பல விட்டு கொடுப்புக்களை செய்து வருகின்றோம். ஆகவே எல்லோரும் எங்களை உற்று கவனிக்கின்ற இந்த காலத்தை சரியாக பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.