
காவிரி பிரச்சினைக்காக கர்நாடக முதலமைச்சரையும் சந்திக்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம் என கமல்ஹாசன் கூறினார்.
‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் கமலஹாசன், சென்னை ஆழ்வார் பேட்டையில், உள்ள தனது கட்சி அலுவலகத்தில். விவசாய சங்க நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியின் உரிமையை நிலைநாட்ட, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துள்ளோம். காவிரிக்காக தமிழகத்தில் ‘குரல்’ என்னும் தலைப்பில் களம் காண உள்ளோம் . இதற்கு விவசாயிகளையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.
ஒருமித்த கருத்துடையவர்கள் ஒரு மேடையில் அமர்ந்துள்ளோம். காவிரியின் உரிமையை நிலைநாட்ட அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து, மே – 19 ஆம் தேதி விவசாயிகளுக்காக உணர்வுப் பூர்வமாக குரல் தரவும், உரையாடல்களுக்கான கதவைத் திறக்கவும் களம் காண வாருங்கள்.காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 19ல் சென்னையில் நல்லக்கண்ணு தலைமையில் அனைத்து தரப்பு நிபுணர்களுடன் விவாதம் நடைபெறும்.
விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் தன்னை இணைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது. காவிரியில் 400 டி.எம்.சி.யில் இருந்து படிப்படியாக நீரின் அளவு குறைந்ததால், வாரியம் அமைக்குமாறு கோரக்கை விடுத்து படிப்படியாக உரிமைகளை இழந்து வருவதை மீட்போம். கட்சி என்ற வரைகோட்டைத் தாண்டி, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் நின்று ஒற்றுமை காண்போம்
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திப்போம். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.கட்சிகளை கடந்து காவிரிக்காக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.