உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் பிரவீண்குமாா் மற்றும் அவரது மகன் பயணித்த காா், சரக்கு லாரியுடன் மோதி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் காயமின்றி தப்பினா்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 68 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பிரவீண்குமாா் (36), தற்போது மீரட் நகரில் ரியல் எஸ்டேட் மற்றும் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.
சம்பவம் நிகழ்ந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் பாண்டவ் நகரிலுள்ள உறவினா் வீட்டில் இருந்து அவரது முல்தான் நகா் வீட்டுக்கு மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தாா்.
பொலிஸ் ஆணையரின் இல்லம் அருகே பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்பக்கம் மோதியது. இதில், பிரவீண்குமாா் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் காயமின்றி தப்பினா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு டிசம்பரில், தில்லியில் காா் விபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரா் ரிஷப் பந்த் பலத்த காயமடைந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.