வனவிலங்கு அதிகாரிகளின் அசமந்த போக்கால் கிணற்றில் வீழ்ந்த மரை மரணமானதாகத் தெரிவித்து பிரதேசமக்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுபுலத்கம மாபத்தன பகுதியிலே 09.08.2016 மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உடுபுலத்கம மாபத்தன கிராமபகுதியில் 09ம் திகதி காலை மரையென்று கிராம காட்டுப்பகுதியில் புதருக்குள் சிக்குண்ட நிலையில் மீள முடியாமல் இருப்பதை கண்ட கிராம மக்கள் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். நீண்டநேரத்தின் பின் வந்த இரண்டு அதிகாரிகளும் கிராமமக்களும் மரையை மீட்க முயற்சித்த போதும் புதருக்குள்ளிருந்து வெளிவந்த மரை அருகிலிருந்த கிணற்றில் வீழ்ந்துள்ளது.
இந் நிலையில் அங்கு வந்த வனவிலங்கு அதிகாரிகளினால் மரையை கிணற்றிலிருந்து மீட்க முடியாத நிலையில் தாங்கள் வனவிலங்கு காரியாலயத்திற்குச்சென்று மேலதிக உபகரணங்களுடன் வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் பிரதேச மக்கள் மரையை மீட்க முயற்சித்தபோதும் முயற்சி பயனளிக்காமல் மரை மரணமானதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். பின் மாலை வேளையில் மரணமான மரையை வனவிலங்கு காரியாலயத்திற்கு கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோதே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அசமந்த போக்கினாலே மரையை மீட்க முடியாமல் போனதாகத் தெரிவித்து மரையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்த கிராம மக்கள் அவ்விடத்தில் மரையை புதைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வன விலங்கு அதிகாரிகளிடம் கேட்டபோது தாங்களிடம் போதிய உபகரணங்கள் இல்லாத நிலையிலேயே மரையை உயிருடன் மீட்க முடியாமல் போனதாகத் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.ஈ.ராமசந்திரன்