கிண்ணியா வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு எடுக்க நடவடிக்கை

294

கிண்ணியா வைத்தியசாலையில் காணப்படும் இடப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக தற்காலிக கட்டடத்தில் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும், அதற்கு தேவையான தாதியர்கள், வைத்தியர்களை ஏனைய பிராந்தியங்களில் இருந்து கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் விசேட திட்டத்தின் பிரகாரம் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான விசேட திட்டம் நேற்று கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கும் போது, கிழக்கில் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த ஒவ்வொரு சுகாதார பிராந்தியங்களும் அதிகளவிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருதுடன் குறித்த டெங்கு நோயினை கட்டுப்படுத்தி வந்த நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் மாத்திரம் தற்போது அதிகளவிலான பாதிப்புக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.

அந்தடிப்படையில் 12 பேர் இதுவரை மரணித்ததுடன் 1000 இற்கும் மேற்பட்டோர் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 02 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநரை கிண்ணியா வைத்தியசாலைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் காணப்படும் டெங்கு பிரச்சினைகளை ஆராய்ந்து டெங்கினை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டோம்.

அந்தவகையில் எமது சுகாதார அமைச்சினால் திருகோணமலை கடற்படையின் வைத்தியர் மற்றும் தாதியர்கள், கல்முனை, அம்பாறை, மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலையின் மேலதிக தாதிமார்களை, உடன் அமுழுக்கு வரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், வைத்தியசாலைக்கு தேவையான அவசர இயந்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வழங்கப்பட்டதுடன், அவசரமாக டெங்கு நோயாளர்களுக்கு தேவையான பரிசோதனை இயந்திரம் கொழும்பில் இருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேசம் மற்றும் மூதூர் பிரதேசத்தை சுத்தப்படுத்த ஏனைய உள்ளூராட்சி சபைகளிலுள்ள இயந்திரங்களை பகிர்ந்தளிக்க உடன் நடவடிக்கை எடுக்கபட்டதுடன் அனைத்து செயற்பாடுகளும் இன்று எமது அமைச்சினாலும், ஏனைய திணைக்களத்தின் உதவிகளுடனும் செயற்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் டெங்கினை கட்டுப்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை செயற்படுத்தியும் உள்ளோம்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்தியங்களின் பணிப்பாளர்களையும் இன்று அழைத்து ஒவ்வொரு பிராந்தியங்கள் ஊடாகவும் தாதியர்கள், வைத்தியர்களை பெற்று கிண்ணியாவில் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம்.

எதிர்வரும் சில தினங்களில் முற்றாக டெங்கினை ஒழிப்பதற்காக செயற்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதுடன், மக்கள் அவதானமாக நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும், தூய்மையாகவும் சுத்தமாகவும் சூழலை வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் நஸீர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் பாயிஸ், திருகோணமலை மாவட்ட அரசங்க அதிபர் புஸ்பகுமார், கிழகு மாகாண சுகாதரா அமைச்சின் செயலாளர் கருனாகரன்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் உசைனுடீன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர், முப்படைகளின் தளபதிகள், சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜமீல் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.​

SHARE