கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளனாக தன்னை பதிவு செய்த தமிழ் இளைஞன்

157

உலகளாவிய ரீதியில் தனி நபரோ அல்லது குழுவாகவே தங்கள் திறமைகள் மூலமாக சாதனைகளை நிலையாட்டுவதே உலகசாதனையாக கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதியப்படுவதுடன் அது உலக வரலாறாகவும் மாறுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இலங்கையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரானது தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலேயே மையங்கொண்டிருந்ததுடன் யுத்தத்தின் கூர்மையை மொத்தமாக தாங்கிய மக்களாகவும், உரிமைபோராட்டத்தில் அனைத்து சொத்துக்களையும் இழந்த தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் தங்கள் வாழ்க்கையை மெதுவாக மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் வன்னியில் கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனால் கின்னஸ் சாதனை ஒன்று நிகழ்த்தப்படுள்ளதானது அனைத்து தமிழ் மக்களையும் பெருமை கொள்ள வைத்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் வடக்கின் நிலைமையே சொல்ல முடியாத அளவிற்கு சீர் கெட்டுள்ளது. வாள் வெட்டு குழு, போதைப்பொருள் பாவனை, கல்வியில் வடக்கு மாகாணம் ஒன்பதாவது இடம் என மாணவர்களும், இளைஞர்களும் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையிலேயே வன்னியில் ஒரு கின்னஸ் சாதனை ஒரு இளைஞனால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சாதிக்கப் பிறந்த மனிதர்கள் என்று யாருமே இல்லை’ முயற்சியும், திறமையும், தடைகளை எதிர்த்து போராடும் குணமும் இருந்தால் போதும் ஒவ்வொரு இளைஞனாலும் சாதிக்க முடியும். சாதனைகளை நிலைநாட்டியவர்களின் வரலாற்றைப்பை புரட்டிப் பார்த்தால் அவர்களெல்லாம் அச்சாதனைக்காக வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள், தடைகள், இழப்புக்கள் ஏராளம் இருக்கும் இவைகளை எதிர்கொண்டு அல்லது புறந்தள்ளி புதியதொரு நம்பிக்கையுடன் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.

சாதிக்கத் துடிப்போருக்கும், உலக வரலாற்றில் இடம்பெறத் துடிப்போருக்கும், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் கின்னஸ் சாதனையாளன் கணேஸ்வரனின் சாதனை உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வட பகுதியில் கின்னஸ் சாதனையாளர்கள் விரல் விட்டு எண்ண முடியும் ஏன் இல்லை என்று கூட சொல்லலாம், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் 1975 இல் மன்னாரில் இருந்து தனிஸ்கோடிக்கு பாக்கு நீரிணையை கடந்து நீந்தி மீண்டும் அதே வேகத்தில் மன்னாருக்கு நீந்தி வந்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆழிக்குமரன் ஆனந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஏழு உலகசாதனைகளுக்கு சொந்தக்காரரனா அவர் பிறவியிலேயே ஒரு கால் ஊனமானவர். இறுதியாக ஆங்கிலக்கால்வாயை நீந்தி கடக்கும் முயற்சியில் அதிக குளிர் காரணமாக சாதனை முயற்சியின்போதே  ஆழிக்குமரன் ஆனந்தன் உயிரிழந்திருந்தார்.

அந்தவகையில் வவுனியாவில் க.கணேஸ்வரன் உலகில் அதிக நீளமான மின் இணைப்பு பொருத்தி (மல்டி பிளக்) ஒன்றை தயாரித்து உலகசாதனை படைத்துள்ளார். இதன் நீளம் 2.914 மீற்றர், அகலம் 0.074 மீற்றர், உயரம் 0.050 மீற்றர் அளவு கொண்டதுமான 42 பிளக் பொயின்றுகளை கொண்டதுமான  மல்டி பிளக்கை தாயரித்து கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இச்சாதனையானது தனி மனித முயற்சினால் நிகழ்த்தப்பட்டுள்ளதுடன் தேசிய ரீதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு முயற்சியாகவே பார்க்க முடியும் அந்தவகையில் வடபகுதி மக்கள் பெருமை கொள்ளக் சுடிய ஒரு சாதனை என்று கூறமுடியும்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனான க.கணேஸ்வரன் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கிலும், மாணவர்களுக்கு கல்வியிலும் சாதனைகளிலும் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனைக்கு அமைவாக 28-02-2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்லூரியின்; அதிபர் எஸ்அமிர்தலிங்கம்;, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உலகசாதனை முயற்சியை மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் 05-07-2018அன்று கின்னஸ் சாதனை உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் அவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் சிறுவயது முதல் தொழில் நுட்ப விடயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். சாதனைகளை படைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்த கணேஸ்வரனுக்கு அதற்கான களம் கிடைத்திருக்கவில்லை, தடைகளை தாண்டிய தொடர் முயற்சியின் காரணமா கடந்த 28-02-2018 அன்று க.கணேஸ்வரனின் சாதனை முயற்சியை நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன், மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரால் பரிசோதனை செய்யப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கிகரிக்கப்பட்ட இவரின் கின்னஸ் சாதனையானது, கின்னஸ் உலகசாதனை இணையதளத்தில் இது தொடர்பாக விபரங்கள் வெளியாகியிருந்தன.

இயந்திரப் பொறியியலாளராகிய க.கணேஸ்வரன் ரொக்கற் தயாரிப்பு முயற்சிகளிலம் ஈடுபட்டு வருகிறார். இருபத்தியெட்டு வயதான கனேஸ்வரன் க.பொ.தர உயர்தரம் வரை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளார். பின் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு இயந்திரவியல் பொறியியலுக்கு தெரிவான இவர் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் 2012 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 14 கண்டுபிடிப்புக்களுடன் இவர் பங்குபற்றியிருந்தார். அவற்றில் இரண்டுக்கு தங்கப்பதக்கங்களும் மற்றொன்றுக்கு இரண்டாம் இடத்திற்கான சான்றிதழும் பெற்றுக்கொண்டுள்ளார்.

உண்மையில் இந்த கின்னஸ் சாதனையாளன் ஊக்குவிக்கப்பட வேண்டியவராகவே இருக்கின்ற போதிலும் எமது அரசியல் மற்றும் அதிகார சமூகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு வெற்றியாளனை சாதனையாளனை ஊக்கப்படுத்தும் போது அவன் இன்னும் சாதிக்க துடிப்பான் என்பதுடன் பல இளைஞர்கள், மாணவர்கள் இச்சாதனையாளனை முன்னுதாரணமாக கொண்டு எமது சமூகத்திற்கான முன்னேற்றத்திற்கு பாடுபடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த கணேஸ்வரனின் கனவு மிகப்பெரியதாக இருக்கிறது. இவரின் தந்தை கனகேஸ்வரன் ஒரு மிருதங்க ஆசிரியராக பணிபுரிபவர். இயந்திரவியல் பொறியிலாளரான கணேஸ்வரன் சிறியரக ரொக்கற்றுக்களை தயாரித்து அதனை விண்ணில் ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்து வருகிறார். பிரபல தனியார் நிறுவனங்களில் பெரிய சம்பளத்திற்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றபோதும் அவைகளை தூக்கி எறிந்து விட்டு சாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தனது தந்தையின் உழைப்பிலும், மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை எடுப்பதனூடாக கிடைக்கபெறும் பணத்தைக் கொண்டும் தனது கண்டுபிடிப்புக்களை கணேஸ்வரன் செய்தகொண்டு வருகிறார்.

கணேஸ்வரனின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கும்; போது ஆரம்பத்தில் எங்களது மகன் வேலையை விட்டு வந்தபோது நாங்கள் விருப்பமில்லாமலே இருந்தோம். ஏனென்றால் பொருளாதார ரீதியில் எங்களுக்கு தேவைகள் இருந்தது. ஆனால் எங்கள் மகன் உலகளாவிய ரீதியில் சாதித்துள்ளமை எங்களுக்கு சந்தோசமாக உள்ளது. எங்களது மகனின் விருப்பம் என்னவோ அதனுடன் கூடவே நாங்களும் பயணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

இந்த வார்த்தைகள் ஒரு பெற்றோருடைய குரலாக பார்க்காமல் எமது சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் எமது சமூகம் பக்கபலமாக இருக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகள், மத வேறுபாடுகள் களையப்பட்டு எமது சமூகத்தை உலக அரங்கில் தூக்கி நிறுத்த துடிக்கும் இளைஞர்களுக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்வதனூடாக எமது சமூகம் சிறந்த ஒரு சமூகமாக இந்த உலகத்தில் அங்கிகரிக்கப்படும்.

கணேஸ்வரன் தனது கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக தெரிவிக்கும் போது எனது  தேசத்தில் சாதனை படைக்க வேண்டும் என்பதுவே எனது விருப்பமாக இருக்கிறது. எனது கண்டுபிடிப்புக்கள் உலக முன்னெற்றத்தின் சமகாலத்துடன் போட்டிபோட்டு பயணிக்கும், எதிர்கால சந்ததி விவசாயத்திலும், தொழில் துறைகளிலும் பயன்படுத்தும் விதமாக உபகரணங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். எனது இலட்சியம் இலங்கையிலிருந்து ஒரு செய்மதியை விண்ணில் ஏவவேண்டும் அது எனது சொந்த தயாரிப்பான ரொக்கற் ஒன்றை நிச்சயம் சுமந்து செல்லும் என உறுதியாக தெரிவிக்கிறார் இந்த இளம் கண்டுபிடிப்பாளன்.

கனகேஸ்வரன் கணேஸ்வரனின் கண்டுபிடிப்புக்கள் எதிர்காலத்தில் எமது தேசத்திற்கும் எமது மக்களுக்கும் பயன்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

-செந்தீ குணா-

SHARE