கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கு அமைய வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

219

625.117.560.350.160.300.053.800.210.160.90

வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற மத்திய கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கமைய அந்த நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்த கோரிக்கை தொடர்பில் அந்த சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள பொருளதார மத்திய நிலையத்திற்கான காணி வழங்கலில் மத்திய அமைச்சுக்கும் மாகாண சபைக்கும் இடையிலான இழுபறி நிலை ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் முடிவெதுவும் எட்டப்படாமல் தொடர்கிறது.

நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் காணி வேண்டுமென மத்திய கிராமிய பொருளதார அமைச்சும், இல்லையில்லை 10 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் ஓமந்தையில் தான் காணியை வழங்க முடியும் என வடமாகாண சபையும் கூறி வருகின்றன.

நகரிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் காணி வழங்காவிட்டால், மத்திய பொருளாதார நிலையத்தை வேறு மாவட்டத்திற்கு இந்தத் திட்டம் கொண்டு செல்லப்பட்டு விடும் என்று மத்திய அமைச்சு எச்சரித்துள்ளது.

ஆயினும், தாண்டிக்குளத்தில் இந்த மத்திய பொருளாதார நிலையத்திற்குக் காணி வழங்க முடியாது அதற்குப் பதிலாக கீழ்க்காணப்படும் காணிகளில் ஒன்றையே வழங்க முடியும் என வடமாகாண சபை கூறுகின்றது.

ஆனால் இந்தக் காணிகளில் ஒன்றை வழங்குவதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை இங்கு முன்வைக்க விரும்புகிறோம்.

கண்டி வீதி பகுதியில் மதகுவைத்தகுளம் காணி

இந்தக் காணியானது, ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு கிறீன் ஏசியா என்ரபிரைஸ் என்ற தனியார் கம்பனிக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குரிய காணி ஆணையாளர் நாயகத்தின் கடிதப் பிரதியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்தக் காணிக்கு அந்தக் கம்பனி நீண்டகால குத்தகையாக அரசாங்கத்திற்கு 03.11.2014 ஆம் திகதி 4.8 மில்லியன் ரூபா பணம் செலுத்தியுள்ளது. அதற்குரிய பற்றுச்சீட்டின் பிரதியையும் இணைத்துள்ளோம். எனவே, இந்தக் காணியை பொருளாதார மத்திய நிலையத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஓமந்தை மாணிக்கவளவு காணி

ஓமந்தை மாணிக்கவளவில் உள்ள இந்தக் காணியானது தனியார் ஒருவருக்குச் சொந்தமானது. மத்திய தர வர்க்கத்தினருக்கான காணி வழங்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்தக் காணியை சுவீகரிப்பதாயின் அதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். ஜனாதிபதியினால் வழங்கப்பட்டமைக்கான காணி உறுதிப்பத்திரமும் இந்தக் காணி உரிமையாளர் வசம் இருக்கின்றது. எனவே இந்தக் காணியையும் பொற்றுக்கொள்ள முடியாது.

ஓமந்தை வேப்பங்குளம் காணி

மூன்றாவது தெரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் காணியானது, 2010 இல் வவுனியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பொருளாதார வலயத்திற்காக வழங்கப்பட்ட காணி என கூறப்படுகின்ற இந்தக் காணியானது, ஓமந்தை வேப்பங்குளம் அரச வீட்டுத் திட்டப் பகுதியில் காணப்படுகின்றது.

இது ஏ 9 வீதியில் இருந்து மேற்குத் திசையில் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது வவுனியா நகரில் இருந்து 13 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள காணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதகுவைத்தகுளம் மற்றும் ஓமந்தை மாணிக்கவளவு ஆகிய இடங்களில் உள்ள காணிகளைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களையடுத்து, மூன்றாவது தெரிவாக ஓமந்தை வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டப் பகுதியில் உள்ள காணி குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் காணி வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள மத்திய அமைச்சு ஓமந்தை மாணிக்கவளவு காணியையும் நிராகரித்துள்ள நிலையில் 13 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஓமந்தை வேப்பங்குளம் காணியை ஏற்றுக்கொள்ளுமா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்காக 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செலவழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இரண்டாம் காலாண்டும் கழிந்துள்ள நிலையில் இந்த ஆண்டின் மார்கழி மாதத்திற்குள் செலவழிக்க முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருத்தமான காணியை வழங்காமல் விட்டால், வவுனியாவுக்கென ஒதுக்கப்பட்ட நிதி மீளப் பெறப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றது.

எனவே, இத்தகைய நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களாகிய நீங்கள் பொறுப்புடன் சிந்தித்து, வவுனியா மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை வேறு மாவட்டத்திற்குச் செல்லவிடாமல், தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

SHARE