கிராமிய பொருளாதார மத்திய மையத்தினை வவுனியாவில் அமைப்பதில், வன்னி அரசியல்வாதிகளைப் புறந்தள்ளும் தென்னிலங்கை, யாழ் அரசியல்த் தலைமைகள்

341

கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளா தார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இதில்; குறிப்பிடப்பட்ட ஒருசிலர் தற்பொழுது வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராகச் செயற்படுவதில் பல அரசியல் பின்னணிகள் இருக்கின்றது. மான்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தினை இங்கு தருகின்றோம்.

24.04.2016.
வவுனியா.

மான்புமிகு முதலமைச்சர் அவர்கட்கு,
வடமாகாணம்.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பானது

மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் இன்று 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வன்னித்தேர்தல் மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்படி திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபா 200 மில்லியன் வேறு மாவட்டத்திற்குச் செல்லாது இருப்பது தொடர்பிலும் மிகுந்த கரிசணையுடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ சுகாதார அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மத்திய கிராமிய பொருளாதார அலுவலக அமைச்சர் கௌரவ.ஹரிசன் அது தொடர்பில் கலந்துரையாடியபோது அமைச்சின் இடத்தெரிவு கொள்கைக்கு அமைய ஓமந்தை மாணிக்கவளவினில் இந்த இடத்தை நடைமுறைப்படுத்த மறுப்புத் தெரிவித்ததாகக் கோரப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக பின்வரும் தீர்மானங்கள் எடுத்துள்ளனர்.

1. மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் மத்திய அமைச்சர் கௌரவ ஹரிசன் அவர்களுடன் கௌரவ முதலமைச்சர் கலந்துரையாடி ஓமந்தை மாணிக்கவளவுப் பகுதியில் மேற்படி பொருளா தார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்தல்.
2. ஓமந்தையில் அமைப்பதற்கான அனுமதி மத்திய அரசினால் மறுக்கப்படும் இடத்தில் இத்திட்டத்தை வேறு மாவட்டத்திற்கு கைநழுவ விடாதவகையில் வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முகமாக தாண்டிக்குளம் அரச பண்ணையில் மேட்டு நிலத்தை மேற்படித் திட்டத்திற்கு வழங்குவதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்குதல் என்ற தீர்மானமே அங்கு எடுக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், இ.சாள்ஸ், திருமதி.சிறிஸ்கந்தராசா, ரெலோ அமைப்பு சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், மயில்வாகனம் தியாகராசா, வடமாகாண சபை அமைச்சரான பா.சத்தியலிங்கம், சி.க.கூ சமாசத் தலைவர் நா.சேனாதிராசா ஆகி யோர் கையொப்பமிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

25TH_WIGNESWARAN_2384794f

இந்தப் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில், ஆரம்பகட்டத்தில் அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களே இதனை வலுவாக முன்னெடுத்தார். அவருடனான நேர்காணலின் போது, இந்த வர்த்தகமையம் அமைப்பது தொடர்பிலான ஆரம்பத்திலிருந்து முடிவுவரையான பேச்சுக்கள் தொடர்பிலும், இதனுடைய அரசியல் பின்னணி தொடர்பிலும் தன்மீது பல அரசியல் கட்சிகள் சேறு பூசும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் என்றும், இவ் பொருளாதார மத்திய மையம் அரசியல் மயமாக்கப்பட்டதன் பின்னணியினாலேயே கட்டிட நிர்மான வேலைகளை செயற்படுத்த முடியாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தனக்குமிடையில் பல இலத்திரணியல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் செய்திகளைத் திரிபுபடுத்தி இவ் பொருளா தார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

பதிவு செய்யப்படாத இணையத் தளங்கள் அரசியல்வாதிகளை விமர்சிக் கின்றன. பாராளுமன்ற சிறப்புரிமை, மாகாணசபை சிறப்புரிமை சட்டத்திற்கேற்ப இவர்கள் மீது வழக்குத் தொடர முடியும்;. இதைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையேயும் இந்த முகவரியற்ற இலத்திரணியல் ஊடகங்கள் தோற்றுவித்துள்ளன. ‘என்னைப் பொறுத்தவரையில் ஹரிசனு டைய தீர்மானங்களுக்கு அமைய ஓமந்தையில் அவர் விருப்பம் தெரிவித்தால் இப்பொருளாதார மத்திய மையத்தை அங்கு அமைக்கலாம். அல்லது அவரது தெரிவு தாண்டிக்குளமாக இருந்தால் அங்கும் அமைக்கலாம். எப்படி அமைக்கப்பட்டாலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி யதாகவே இவ்பொருளாதார மத்திய மையம் அமையப்பெறும். அதில் எனக்கு ஆட்;சேபனையில்லை. என்னை மக்கள் மத்தில் மூன்றாம் தரப்பாகக் காட்ட பல அரசியல்வாதிகள் புரிதலின்றி முனைகின்றனர். றிசாட் பதியூனிடம் கோடிக்காணக்காக பணம் கைமாறி யதாகக் கூறுகின்றனர். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் தமிழ் மக்களுடைய தேவை களை இணங்கண்டு அவர்களுடைய விருப்பு, வெறுப்புக்களை இணங்கண்டு செய்திகளை வெளியிடுதல் வேண்டும். நீங்கள் அரசியல்வாதிகள் பின்னால் கொடிபிடித்து ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்தி செயற்படுவதன் ஊடாக ஊடக தர்மத்தினைக் குழிதோன்றிப் புதைக்கின்றீர்கள்.

sam-860-012

அரசியல்வாதிகளினுடைய அரசி யல் பயணம் என்பது ஐந்து வருடமோ, பத்துவருடமோ அல்லது சுயநல அரசி யலை லாபம் கருதி செய்துவிட்டு, அதன் பின் மக்கள் பற்றி சிந்திக்காது, தமது குடும்ப நல அக்கறையுடன் செயற்பட்டு பாராளுமன்றத்திலிருந்தோ, மாகாணசபையிலிருந்தோ ஒதுங்கி நிம்மதியாக வாழ்வார்கள். நான் தொடர்ந்தும் மக்கள் சேவையிலேயே இருந்து வரும் ஒருவன். அதனையே அரசியலுக்கு வருவதற்கு முன்பும் செய்துகொண்டிருந்தேன். அரசியலுக்கு அப்பால் மக்களது விருப்பு வெறுப்பு என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். இவ் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் விமர்சனங்களை விட்டுவிட்டு தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து இதற்கான முடிவினை மேற்கொள்ளவேண்டும். வவுனியாவின் எப்பிரதேசத்தில் இவ்வர்த்தக மையம் அமைந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. இங்கு பொருளாதார மத்திய மையத்தினை அமைப்பதற்கு யாழ் தலைமைகளோ, தென்னிலங்கை அரசியல்வாதிகளோ தலையிடவேண்டிய அவசியமில்லை. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தீர்மானித்து இரண்டு கிலோமீற்றர் சுற்றளவுக்குள் ஒரு இடத்தைத் தெரிவு செய்து கொடுத்திருந்தால் அவ்விடம் சிபார்சு செய்யப்பட்டு அதில் வர்த்தகமையம் அமைப்பதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

வவுனியா பிரதேத்தில் இவ் வர்த்தக மையம் அமையப்பெறாமல் இருப்பதற்கும், வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வர்த்தக அமைப்புக்களும், விவசாய அமைப்புக்களும் தீர்மானங்களை எடுத்து இவ்வர்த்தக மையத்தை ஓமந்தையிலோ, தாண்டிக்குளத்திலோ அமையுங்கள் என்று ஒற்றுமையாகக் கூறமுடியாத நிலையிலுள்ளனர். யாழ் மாவட்ட அரசியல்த் தலைமைகளும், தென்னிலங்கை அரசியல் தலை மைகளும் இதற்குள் மூக்கை நுழைத்து தமது அரசியலை நடத்துகின்றனர். இதற்கு இடமளித்தது வன்னித் தலைமைகளே. அதிகாரபூர்வமான முடிவை ஏன் உங்களால் எடுக்கமுடியாது போனது, நீங்கள் அவர்களைவிட அரசியலில் அனுபவம் குறைந்தவர்களா? யாழ் அரசியல் தலைமைகளும், தென்னிலங்கை அரசி யல் தலைமைகளும் வன்னி அரசியலை மட்டம் தட்டுகின்றார்களா? இதற்குள் பல விடயங்கள் மறைந்திருக்கின்றது. அன்று கையெழுத்திட்ட வன்னித் தலைமைகள் அனைத்தும் இன்று வவுனியாவில் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் ஏன் முரண்பட்டு நிற்கின்றார்கள் என்பது மக்களாகிய உங்களுக்குப் புரியும். ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்பது அல்ல இங்கு பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

625-2

இதுமட்டுமன்றி சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் இவ்வர்த்தக மையம் அமைப்பது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் செயற்பட்டார். ஒரு பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பா அல்லது தமிழ் மக்கள் பேரவையா என்கிற நிலைப்பாடு இருக்க, மறுபக்கத்தில் சிவசக்தி ஆனந்தனா? சத்தியலிங்கமா என்கிற பிரச்சினைகளும் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் வர்த்தக மற்றும் விவசாய அமைப்புக்களும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை 16.07.2016 அன்று மாலை 4.00 மணியளவில் வவுனியா வின் வன்னி இன் ஹோட்டலில் வைத்துச் சந்தித்தன. இதில் அவர் கூறிய விடயம் என்னவெனில், தான் ஜனநாயகத்தினை விரும்புவதாகவும் ஜனநாயக ரீதியிலான முடிவுகளை மேற்கொள்வதே சிறந்தது எனவும் குறிப்பிட்டார். ஆகவேதான் இந்த முடிவினை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கையில் கொடுத்துவிட்டேன். எனவே அமைப்புக்கள் ஒன்றிணைந்து நல்லதொரு முடிவினை மேற்கொண்டு, எங்கு அமையப்பெற வேண்டுமென்று திடகாத்திரமாகக் கூறவேண்டும். முடிவெடுப்பதற்கே 06மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் இதற்கு காலம் தாமதம் ஏற்படுமாகவிருந்தால் பணம் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட சம்பந்தன் அவர்கள் பொதுநோக்கோடு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்கிற கருத்தை இருதரப்புக்கும் எடுத்துரைத்தார்.

இவ்விடயம் அவரை சிறந்தவர் என எடுத்துக்காட்டினாலும் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றது என்கிற குற்றச்சாட்டும் நிலவுகின்றது. இதற்கிடையில் இரா.சம்பந்தனுடைய உருவப்பொம்மையொன்று வன்னி இன் ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள இந்து ஆலயத்திற்கு முன்பாக, அவரது கேலிப்படமொன்றுக்கு பாதணிக ளால் மாலை அணிவித்து அதில், ‘தாண்டிக் குளத்திற்கு வாக்கெடுப்பு நடாத்தும் உனக்கு சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? வாக்கெடுப்பு நடாத்த தலைமைத்துவ தகுதி உண்டா?’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

jlj

வடமாகாண மக்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், விவ சாயிகள் என அனைவரும் ஒன்றிணைச் சிந்திக்கவேண்டும். எமது மாவட்டத்தின் பிரச்சினைகளை வேறு பிரதேசத்தில் இருப்பவர்கள் விமர்சிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பதன் காரணமாகவே எமது பிரதேசத்திற்கென அபிவிருத்தித் திட்டங்கள் வருகின்றபோது அதனை உரிய முறையில் செயற்படுத்த முடியாதுள்ளது.

ஆகவே தமிழ் மக்களாகிய நாம் அரசியல்வாதிகள் பக்கம் சாராது, எமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகளுக்கு பூரண ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். இன்று இந்த பொருளாதார வர்த்தக மையம் தேசிய மட்டப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமன்றி கௌர வப் பிரச்சினைகளாக தமிழரசுக் கட்சியா?, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பா?, தமிழ் மக்கள் பேரவையா, என்ற நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது. அடுத்து நடைபெறவிருக்கும் ஒருங்கிணைப்புக் குழுச் சந்திப்பின் பின்னரே இதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். இங்கு ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது என்பதனையே இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பான பிரச்சினை எடுத்துக்காட்டுகிறது. எங்கு அமைப்பது என்கிற முடிவினை உடனடியாக எடுத்து, எமக்கு வழங்கப்பட்ட நிதி திரும்பிச்செல்வதைத் தடுத்து, எமது பிரதேசத்தின் நலன்கருதி இவ்பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால் அது சிறந்ததொன்றாக அமையுமெனலாம்.

– இரணியன் –

 

 

SHARE