கிரிக்கெட் வீரராகி சுனாமியை ‘ரிவெஞ்ச்’ எடுத்த மீனவர்!

258

வறுமையால் ஏழாம் வகுப்போடு அந்த சிறுவனின் பள்ளி படிப்பு நின்று போனது. எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்சத்தையும் சுனாமி பறித்தது. சுனாமியை ‘ரிவெஞ்ச்’ எடுக்க பெரிய ஆளாகிக் காட்ட வேண்டும் என்ற உறுதியோடு கிளம்புகிறான் அந்த சிறுவன்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளம் என்ற கடலோர கிராமம். சிறுவன் அந்தோணி தாசுக்கு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது மட்டும்தான் கனவு. படிப்பு எல்லாம் அப்புறம்தான். ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, கடலுக்கு சென்ற தாசின் தந்தை கட்டுமரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கினார். அவரால் தொடர்ந்து கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை. குடும்ப பாரம் சிறுவன் மீது விழுகிறது. அந்தேணி தாசுக்கு 5 சகோதரிகள். தனிஆளாக குடும்பத்தை காப்பற்ற வேண்டிய சூழல். பனிரெண்டு வயதிலேயே அந்தோணி தாஸ் கடலோடுகிறான்.

அரை வயிற்று கஞ்சியுடம் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சுனாமி தாக்குகிறது. கடலோர கிராமங்கள் சின்னாப்பின்னமாகின. அந்தோணி தாஸ் குடும்பத்தினரே சுனாமியில் தப்பித்ததே பெரிய கதை. இருந்த கட்டுமரம் காணாமல் போனது. மீன்பிடி வலைகள் சிதைந்து போயின. வீட்டில் இருந்த பொருட்கள் தண்ணீரோடு போய் விட்டன. கீறல் விழுந்த சுவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. பட்டக் காலிலேயே படும் என்பது போல, வாழ்க்கையே வெறுமையாகிப் போனது அந்தோணி தாசுக்கு.

”தந்தையால் கடலுக்கு போக முடியாத சூழல். நான் ஒருவன்தான் சம்பாதிக்க வேண்டும். 5 சகோதரிகள். அவர்களை நல்ல இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். சுனாமித் தாக்கிய போது எல்லாமே இழந்து விட்டோம். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே ஒரு மாதம் பிடித்தது. வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது. வாழ்க்கையில் பெரிய ஆளாகி காட்ட வேண்டுமென்ற என்ற விதையை எனக்குள் விதைத்தது சுனாமிதான். சுனாமியை ரிவெஞ்ச் எடுக்க கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்தேன் ” என்கிறார் அந்தோணி தாஸ்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் ‘டாப் பிளேயர்’ அந்தோணிதாஸ்தான். ஆல்ரவுண்டரான 27 வயது அந்தோணி தாசின் கிரிக்கெட் கனவு நனவாக நண்பர்கள்தான் உதவி செய்துள்ளனர்.

” நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும் போது, ‘இவனுக்கு இதெல்லாம் தேவையா… பொழப்ப பாக்குறது விட்டு விட்டு கிரிக்கெட் விளையாடுறானாம் கிரிக்கெட்டு’ என்று கிண்டலடித்தனர். கடலுக்கும் போய்விட்டு கிரிக்கெட்டும் விளையாடுவது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் போகப் போக பழகி விட்டது. ஒரு கட்டத்தில் சொந்த ஊரில் இருந்து கிளம்பினேன். சென்னைக்கு வரும் போது பதினெட்டு வயது. பயணச் செலவுக்கு கூட என்னிடம் பணம் இல்லை. நண்பர்கள்தான் எல்லாவற்றுக்கும் உதவி செய்தனர். ‘கிட் ‘ வாங்கவும் டிரெஸ் எடுக்கவும் கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள்தான் உதவினர். சென்னை வந்த முதல் 5 ஆண்டுகள் கஷ்ட காலம்தான்.

சேப்பாக்கத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் ஒரு முறை 40 ரன்கள் அடித்தேன். உடனடியாக எம்.ஆர்.எப் என்னை அரவணைத்துக் கொண்டது. பின்னர் ரஞ்சி டிராபியில் தமிழக அணிக்காக விளையாடினேன். 2015-ம் ஆண்டில் நடந்த ரஞ்சி போட்டியில் ஹரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினேன்.இதுதான் எனக்கு கிடைத்த ஊக்கம்.

இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாட ஆரம்பித்துள்ளேன். என்னை டி.வியில் என்னைப் பார்த்து எங்கள் கிராமத்தினர் பூரிக்கின்றனர். பணக்கார பின்னணியில் இருந்து வந்தால்தான் சாதிக்க முடியும் என்கிற பொதுவான கருத்து கிரிக்கெட் விளையாட்டில் இருக்கிறது. அதனை நான் தகர்த்துள்ளேன். இளைஞர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். ஃபேஸ்புக்கில் இப்போது என்னை 10 ஆயிரம் பேருக்கு மேல் பின் தொடருகின்றனர். ஒரு காலத்தில் ஒரு 10 பேராவது நம்மை பின் தொடர மாட்டார்களா என ஏங்கியது உண்டு. தேசத்துக்காக விளையாட வேண்டும். ஐ.பி.எல். லில் விளையாட வேண்டுமென்கிற கனவும் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் என்னை தயார்படுத்த வேண்டும்.கிரிக்கெட்டில் முடிந்தளவு சாதித்து விட்டு மீண்டும் மீன் பிடிக்கப் போவேன்” என்கிறார் இந்த கடலோடி.

SHARE