கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு அறிவிப்பதா? பிரதமருக்கு எதிராக பாய்ந்தது வழக்கு

125

ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசு அறிவித்த பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாரிக் ஆசாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்குத் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசுக்கு ரூ.21.5 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் மாத ஊதியம் பெறுபவர்கள். பொதுமக்களின் வரிப்பணம் பொதுமக்கள் நலனுக்காகவே செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஹல்வான்பூர் பகுதியில் சமீபத்தில் நடந்த பெட்ரோல் டேங்கர் லொறி விபத்தை மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இல்லாதநிலையில் அரசு இதுபோன்ற செலவுகளை மேற்கொள்வதை விடுத்து, மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆமீர் ஃபாரூக், விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் பரிசுத் தொகை அளிக்க சட்டத்தில் வழிவகை இருக்கிறதா என்பது குறித்தும், அவ்வாறு அளிக்கலாம் என்றால் அதிகபட்சமாக எவ்வளவு அளிக்கலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரில் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

SHARE