மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள 15 பேரும் ‘மேட்ச் வின்னர்கள்’ தான் என்று அந்த அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள அதிரடி வீரர் கெய்லை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விரைவில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அடுத்து வந்த சார்லஸ், சிம்மன்ஸ், ரஸல் அதிரடி காட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி கூறுகையில், “இந்தியா சிறந்த ஒரு அணி. அந்த அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனால் அவர்கள் 10 ஓட்டங்களை குறைவாக எடுத்து விட்டார்கள். இந்தப் போட்டியில் நான் நாணய சுழற்சியில் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டேன். இதுவரை 5 போட்டியிலும் நான் நாண சுழற்சியில் வென்றது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. கிறிஸ் கெய்ல் விரைவில் ஆட்டமிழந்தாலும் சார்லஸ், சிம்மன்ஸ், ரஸல் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்தனர். நாங்கள் கிறிஸ் கெய்லை நம்பி இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு சிறந்த வீரர். ஆனால் எங்கள் அணியில் 15 ‘மேட்ச் வின்னர்கள்’ இருக்கிறார்கள். ஜூனியர் உலகக்கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. மகளிர் டி20 உலகக்கிண்ண போட்டியில் இறுதிப்போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இருக்கிறது. தற்போது நாங்களும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். |