தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல் பொதுமக்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த ஆண்டு மட்டும் 7,928 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது, 2014-ம் ஆண்டை விட 1,500 பேர் அதிகம். இதன்படி பார்க்கும்போது, ஒரு நாளைக்கு சராசரியாக 22 குழந்தைகள் கடத்தப்படுகின்றன.
டெல்லியில் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகமான குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 22 ஆயிரம் குழந்தைகள் மாயமாகி இருப்பதாகவும், அதில் சுமார் 9 ஆயிரம் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, தொண்டு நிறுவன அதிகாரி சோஹா மொய்த்ரா கூறுகையில், ”டெல்லியில் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடத்தப்படும் சிறுமிகள் வீட்டு வேலைக்கு அனுப்படுகின்றனர். சிறுவர்கள் மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். சில குழந்தைகள் விற்பனைக்காகவும் கடத்தப்படுகின்றனர். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
ஏழைகளின் குழந்தைகள், சாலையோரங்களில் வசிப்போரின் குழந்தைகளே அதிகமாக காணாமல் போகின்றன. காணாமல் போன குழந்தைகளை தேடுவதில் ஏற்படும் தாமதம், தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடு போன்றவற்றால் குழந்தைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குழந்தைகளை கடத்துவதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
– Vikatan